உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை தொடர்ந்து உலக கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளது இந்தியா. 

மும்பையில் நேற்று உலக கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டது. கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித், தவான், தோனி, ராகுல், கேதர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகிய வீரர்கள் ஏற்கனவே உறுதியான ஒன்று. 

இந்திய அணியின் சிக்கலாக பார்க்கப்பட்ட நான்காம் வரிசைக்கு யாரை எடுக்கப்போகிறார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் விஜய் சங்கருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்ட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

ஆனால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினார். ஆனாலும் தினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளுக்கு மட்டுமே எடுக்கப்பட்டதால் அவரை டி20 வீரராக மட்டுமே தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் பார்ப்பதாக ஒரு தோற்றம் இருந்தது. அதனால் ரிஷப் பண்ட்டுக்கான வாய்ப்பே இருப்பதாக தெரிந்தது. இந்நிலையில், ரிஷப் பண்ட்டை ஓரங்கட்டிவிட்டு தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்துள்ளனர். 

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதுதான் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டதற்கான காரணம். தோனி ஆடாத பட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் ஆடுவார் என்பதால், மாற்று விக்கெட் கீப்பர் களமிறங்குவதற்கான வாய்ப்பு அரிதினும் அரிதுதான். எனினும் உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடித்தது பெரிய விஷயம்தான்.

அனைவரும் ரிஷப் பண்ட்டையே எதிர்பார்த்திருந்த நிலையில், தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்தது குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், மாற்று விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது குறித்து நீண்ட மற்றும் ஆழமான விவாதம் நடைபெற்றது. தோனி ஆடாத பட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் இறக்கப்படுவார். அதனால் மாற்று விக்கெட் கீப்பர் தோனியின் இடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதாலும் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்கக்கூடிய திறன் பெற்றவர் என்ற வகையிலும் அவரை தேர்வு செய்தோம். ரிஷப் பண்ட் திறமையான வீரர் தான். ஆனால் அவருக்கு இன்னும் போதுமான நேரம் இருக்கிறது. இப்போதைக்கு இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தான் சரியான தேர்வு என்பதால் அவரை தேர்வு செய்ததாக எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார். 

இந்நிலையில், ரிஷப் பண்ட்டை அணியில் எடுக்காதது வியப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், ரிஷப் பண்ட் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில், அவரை உலக கோப்பை அணியில் எடுக்காதது ஆச்சரியமாக உள்ளது. ஐபிஎல்லில் மட்டுமல்லாமல் அதற்கு முன்னதாகவும் நன்றாகவே ஆடினார். விக்கெட் கீப்பிங்கிலும் நிறைய மேம்பட்டிருக்கிறார். அப்படியிருக்கையில் அவரை எடுக்காதது வியப்பானதுதான். முதல் 6 பேட்ஸ்மேன்களில் தவான் மட்டுமே இடது கை பேட்ஸ்மேன். மிடில் ஆர்டரில் ஒரு பேட்ஸ்மேன் கூட இடது கை பேட்ஸ்மேன் கிடையாது. இடது - வலது பேட்டிங் இணை பேட்டிங் ஆடும்போது எதிரணி பவுலருக்கும் சிரமம். ஃபீல்டிங் செட் செய்வதில் எதிரணி கேப்டனுக்கும் அதிக பளு இருக்கும். அதனடிப்படையில், இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் மிடில் ஆர்டரில் இருப்பது அவசியம். ஆனால் ரிஷப் பண்ட் எடுக்கப்படாதது ஆச்சரியம்தான் என்று கவாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.