உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது. இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த 4ம் வரிசை பேட்ஸ்மேனை 2 ஆண்டுகளாக தேடியும் இந்திய அணி நிர்வாகத்தால் சரியான வீரரை கண்டறிய முடியவில்லை. 

அதன் எதிரொலியாக உலக கோப்பையில் தோற்று இந்திய ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. உலக கோப்பைக்கு பின்னர் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. இந்திய அணி, ரோஹித் மற்றும் கோலி தலைமையில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதாகவும், துணை கேப்டன் என்ற வகையில் ரோஹித்தின் ஆலோசனையை கேட்காமலேயே கேப்டன் கோலி தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது. மேலும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும் ஒரு தகவல் வந்தது.

மேலும் உலக கோப்பை சமயத்தில் 15 நாட்கள் மட்டுமே குடும்பத்தினரை தங்களுடன் தங்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்திருந்தது. ஆனால் கேப்டன் கோலியின் அனுமதியின்றி ரோஹித் சர்மா தொடர் முழுவதும் மனைவி ரித்திகாவை தங்கவைத்திருந்ததாகவும் இதுதொடர்பாக ரோஹித்திடம் கோலி கேட்கப்போய்த்தான் பிரச்னை வந்ததாகவும் ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் அதற்கு முன்பிலிருந்தே ரோஹித் - கோலி பனிப்போர் குறித்து பேசப்பட்டுவருகிறது. எனவே இதுதான் இருவரின் மோதலுக்கு காரணம் என்று கூறமுடியாது.

உலக கோப்பைக்கு பின்னர் இதுதான் ஹாட் டாபிக்காக பேசப்பட்டது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்புவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலியிடம், ரோஹித்துடனான மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ரோஹித்துடன் எந்த மோதலும் கிடையாது என திட்டவட்டமாக மறுத்தார். 

அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ரோஹித்தும் கோலியும் இணைந்து நாட்டுக்காக ஒற்றுமையுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். அவர்கள் இருவருக்கு இடையே தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, அது அணியின் நலனை பாதிக்காத அளவிற்கு அணிக்காக ஒற்றுமையுடன் இருவரும் இணைந்து ஆடும் முதிர்ச்சியுடையவர்கள் என்பதால் பிரச்னையில்லை. 

இந்நிலையில், ரோஹித் - கோலி மோதல் குறித்து பேசிய கவாஸ்கர், தனக்கும் கபில் தேவுக்கும் இடையேயான மோதல் குறித்து அந்த காலத்தில் வெளியான தகவலை கூறி பேசினார். இதுகுறித்து பேசிய முன்னாள் கேப்டன் கவாஸ்கர், 1984-85ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கொல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியில் கபில் தேவ் நீக்கப்பட்டார். உண்மையாகவே கபில் தேவை நீக்கத்திற்கு நான் காரணமில்லை. கபில் தேவை நீக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தவும் இல்லை. ஆனால் அனைவரும், கபில் தேவின் நீக்கத்திற்கு நான் தான் காரணம் என என் மீது எளிதாக பழிசுமத்தினர். அப்போது செலக்‌ஷன் கமிட்டியில் இருந்த ஹனுமந்த் சிங், ஓராண்டு கழித்து உண்மையை ஒரு கட்டுரையில் எழுதினார். 

நான் என்னவா வேணா இருந்துட்டு போறேன்.. ஆனால் மேட்ச் வின்னரை, கேம் சேஞ்சரை(கபில் தேவ்) அணியிலிருந்து நீக்க, நான் என்ன முட்டாளா..? என்று அந்த சம்பவம் குறித்து தடாலடியாக பேசினார். மேலும் இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் ரோஹித் - கோலி மோதல் குறித்த பேச்சு பேசப்பட்டு கொண்டே தான் இருக்கும். அதனால் இதில் கவனம் செலுத்தாமல் அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக, அணிக்காக சிறப்பான பங்களிப்பை செய்வதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.