ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் கடந்த 19ம் தேதி நடந்தது. இந்த ஏலத்தில் பல சம்பவங்களின் வாயிலாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது கேகேஆர் அணிதான். ஆஸ்திரேலியாவின் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரை ரூ.15.5 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல்லில் அதிகமான தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் கம்மின்ஸ்தான்.

 அதேபோல 48 வயதான பிரவீன் டாம்பே என்ற ஸ்பின்னரை ஏலத்தில் எடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது கேகேஆர் அணி. ஐபிஎல்லில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள அதிக வயதுள்ள வீரர் இவர் தான். இதற்கு முன்னரும் ஐபிஎல்லில் ஆடியதில் இவர் தான் மிகவும் வயதான வீரர். 48 வயதான அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை அணியில் எடுத்தது. 

அதேபோல அனைத்து அணிகளும் கிரிக்கெட் அரங்கில் பிரபலமான மற்றும் நன்கு அறிமுகமான வீரர்களை குறிவைத்து ஏலத்தில் எடுத்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த 21 வயதே இளம் திறமையான டாம் பாண்ட்டனை ரூ.1 கோடி கொடுத்து எடுத்துள்ளது. அதிரடி பேட்ஸ்மேனான டாம் பாண்ட்டன் ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் லீக் தொடரில் அபாரமாக ஆடிவருகிறார். பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஆடும் பாண்ட்டன், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

அனுபவ ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவை கழட்டிவிட்ட கேகேஆர் அணி, தமிழ்நாட்டின் இளம் ஸ்பின்னர் சித்தார்த் மணிமாறனை அணியில் எடுத்துள்ளது. இவ்வாறு ஐபிஎல் ஏலத்தில் பரபரப்பாக பல சர்ப்ரைஸ் பர்சேஸிங் செய்தது கேகேஆர் தான். 

ஆனால் ஏலத்தில் கேகேஆர் அணி தேர்வு சரியில்லை என்று, அந்த அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கம்பீர் விமர்சித்துள்ளார். ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், இயன் மோர்கன் ஆகியோருக்கு தகுதியான மாற்று வீரர்கள் அணியில் இல்லை என்று விமர்சித்துள்ளார் கம்பீர். 

இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், கேகேஆர் அணியை பாருங்கள்.. ஆண்ட்ரே ரசல், இயன் மோர்கன், சுனில் நரைன் ஆகியோருக்கு மாற்று வீரர்கள் அணியில் இல்லை. மோர்கன் காயத்தால் ஆடமுடியாத சூழ்நிலை வந்தால், அவரது இடத்தை நிரப்புமளவிற்கு, அவருக்கு நிகரான வெளிநாட்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லை. அதே பாட் கம்மின்ஸ் ஆடமுடியாமல் போனால் பிரச்னையில்லை. ஏனெனில் அவரது இடத்தை நிரப்ப லாக்கி ஃபெர்குசன் இருக்கிறார். ஆனால் ரசல், மோர்கன், சுனில் நரைன் இடத்தை நிரப்ப சரியான மாற்று வெளிநாட்டு வீரர்கள் இல்லை என கம்பீர் தெரிவித்துள்ளார். 

கேகேஆர் அணி:

தக்கவைத்த வீரர்கள்:

தினேஷ் கார்த்திக்(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஷுப்மன் கில், சுனில் நரைன், கமலேஷ் நாகர்கோடி, குல்தீப் யாதவ், ஹாரி கர்னி, லாக்கி ஃபெர்குசன், நிதிஷ் ராணா, பிரசித் கிருஷ்ணா, ரிங்கு சிங், சந்தீப் வாரியர், ஷிவம் மாவி, சித்தேஷ் லத்(மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பெறப்பட்டவர்).

ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்ட வீரர்கள்:

பாட் கம்மின்ஸ், இயன் மோர்கன், வருண் சக்கரவர்த்தி, டாம் பாண்ட்டன், ராகுல் திரிபாதி, கிறிஸ் கிரீன், நிகில் ஷங்கர் நாயக், பிரவீன் டாம்பே, சித்தார்த் மணிமாறன்.