இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் வெற்றிகளை குவித்துவருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2-0 என தொடரையும் வென்றது. இது சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக வெல்லும் 11வது டெஸ்ட் தொடர். இதன்மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிகமான டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 

இந்த 11 டெஸ்ட் தொடர் வெற்றிகளில் 9 வெற்றிகள் கோலியின் கேப்டன்சியில் பெறப்பட்டவை. கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி 50 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 30 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் அதிகமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனும் கோலி தான். இந்திய மண்ணில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்திய அணி வெற்றிகளை குவித்துவருகிறது. கோலியின் தலைமையில் ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. 

இவ்வாறு சர்வதேச அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது. போட்டியை டிரா செய்ய வேண்டும் என நினைக்காமல் வெற்றி பெற வேண்டும் என்ற கேப்டன் கோலியின் வேட்கைக்கு கிடைக்கும் வெற்றிகள் தான் இவை. 

அதைத்தான் கம்பீர் தெரிவித்துள்ளார். கங்குலி, தோனி, டிராவிட் ஆகியோரைவிட கோலி வெற்றிகரமான கேப்டனாக திகழ்வதற்கான காரணத்தை கம்பீர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், தோற்பதற்கு பயந்தால் வெற்றி பெற முடியாது. ஆனால் கோலி தோற்பதற்கு பயப்படுவதில்லை. அதனால்தான் வெற்றிகளை குவித்து கொண்டிருக்கிறார். பயமற்ற அவரது அணுகுமுறையும் மனவலிமையும்தான் டெஸ்ட் கேப்டனாக அவர் வெற்றிகளை குவிப்பதற்கான காரணம் என நினைக்கிறேன். கங்குலி, டிராவிட், தோனி ஆகிய முன்னாள் கேப்டன்கள் அந்த ரிஸ்க்கை எடுக்கவில்லை. ஆனால் கோலி ரிஸ்க் எடுப்பதால்தான் வெற்றிகளை பெற முடிகிறது. கங்குலி, டிராவிட், தோனி ஆகியோரும் நல்ல கேப்டன்கள் தான். இந்திய அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கோலியின் தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளிலும் வெற்றிகளை பெறுகிறது என்று தெரிவித்துள்ளார். 

விராட் கோலியின் கேப்டன்சியை கழுவி ஊற்றுபவர்களில் முதன்மையானவர் கம்பீர் தான். மோசமான கேப்டன்சியை விமர்சிக்கும் அதேவேளையில், திறமையையும் பாராட்டக்கூடியவர் கம்பீர். அதைத்தான் இப்போதும் செய்துள்ளார். என்னதான் கோலியின் கேப்டன்சியை விமர்சித்தாலும், தான் ஆடிய கேப்டன்களிடம் இல்லாத ஒரு துணிச்சல் கோலியிடம் இருப்பதை பார்த்ததும் வெளிப்படையாக மனதார பாராட்டியுள்ளார்.