ரோஹித் சர்மாவின் 33வது பிறந்ததினம் இன்று. இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான ரோஹித் சர்மா, பல பேட்டிங் சாதனைகளுக்கு சொந்தக்காரர். 

ஒருநாள் கிரிக்கெட்டில் 264 என்ற அசாத்திய அதிகபட்ச ஸ்கோருடன் 3 இரட்டை சதங்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் 4 சதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலைசிறந்த வீரராக வலம்வரும் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த நிலையில் கடந்த ஆண்டின் இறூதியில் தென்னாப்பிரிக்கா, வங்கதேசத்திற்கு எதிராக சிறப்பாக ஆடி டெஸ்ட் அணியிலும் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் 29 சதங்கள் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மொத்தம் 33 சதங்களை விளாசியுள்ளார். ஐபிஎல்லிலும் ஒரு சதம் அடித்திருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் 5 சதங்களை அடித்தார். ஒரு உலக கோப்பை தொடரில் அதிகமான சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ரோஹித் சர்மா. 

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் ரோஹித் சர்மாவின் பிறந்தநாளான இன்று, அவரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என கம்பீர் பாராட்டியுள்ளார். ரோஹித்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட டுவீட்டில், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் ரோஹித் சர்மாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்தியுள்ளார்.

கம்பீர் ஒரு மரியாதைக்காகவோ அல்லது பாசாங்கிற்காகவோ பாராட்டும் நபர் அல்ல. மிகவும் நேர்மையாகவும் நியாயத்தையும் பேசக்கூடிய உண்மையான மனிதர். எனவே அவர் ரோஹித்தை பாராட்டியது உண்மையான பாராட்டு.