சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் ஆடி அதிக சதங்கள்(100 சதங்கள்), அதிக ரன்கள் என பல்வேறு பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்டு, தன்னிகரில்லா ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்பவர். 

விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 43 ஒருநாள் சதங்கள் மற்றும் 27 டெஸ்ட் சதங்கள் என மொத்தம் 70 சதங்களை குவித்துவிட்டார். 31 வயதிலேயே 70 சதங்களை விளாசிவிட்டார் கோலி. எனவே அவரது கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடுவதும், இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்வியும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. 

அந்தவகையில், கம்பீரிடமும் இந்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் கம்பீரிடம் சச்சின் - கோலி இருவரில் யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல் தயங்காமல் சச்சின் தான் பெஸ்ட் என தெரிவித்த கம்பீர், அதற்கான காரணத்தையும் தெரிவித்தார். 

அந்த கேள்விக்கு பதிலளித்த கம்பீர், கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கர் தான் சிறந்த பேட்ஸ்மேன். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் இப்போதைய விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சாதகமாக அமைந்துள்ளது. 4 ஃபீல்டர்களுக்கு மேல் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே இப்போது நிற்க முடியாது. ஆனால் அப்போதெல்லாம் அப்படியில்லை. அப்போதைய விதிமுறைகள், இந்தளவிற்கு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக இல்லை.

இப்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2 வெள்ளை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் ரிவர்ஸ் ஸ்விங் கிடையாது, ஆஃப் ஸ்பின்னர்களுக்கு வேலையே கிடையாது, 5 ஃபீல்டர்கள் வட்டத்திற்குள் நிற்கிறார்கள். எனவே பேட்டிங் செய்வது இப்போது மிக எளிதாகிறது.

விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் அபாரமாக ஆடுகிறார். ஆனால் இப்போதைய விதிமுறைகள், பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங்கை எளிதாக்குகிறது. சச்சின் ஆடிய காலத்தில் இப்படியெல்லாம் இல்லை. அப்போதெல்லாம், 230-240 ரன்கள் என்பதே வெற்றிக்கு போதுமான ஸ்கோர். நீண்டகாலம் சிறப்பாக ஆடிய விதத்தில் சச்சின் டெண்டுல்கர் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.