இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு இறுதியில் முடிந்தது. பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்காரை தவிர மற்ற அனைவருமே அவரவர் பதவியில் நீடித்தனர். சஞ்சய் பங்காருக்கு மட்டும் பொறுப்பு நீட்டிப்பு வழங்காமல், புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வு செய்யப்பட்டார்.

விக்ரம் ரத்தோர் அதிகமான உள்நாட்டு போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவமான வீரர் தான் என்றாலும், அவர் அதிகமான சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கவில்லை. வெறும் 6 சர்வதேச டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். ஆனால் அதனால் அவர் பயிற்சியாளராக இருக்க தகுதியில்லாதவர் என்று அர்த்தமில்லை.  

இந்நிலையில், விக்ரம் ரத்தோர் டி20 போட்டிகளில் ஆடியதேயில்லை என்பதை சுட்டிக்காட்டி விக்ரம் ரத்தோரின் திறமையை சந்தேகிக்கும் விதமாக யுவராஜ் சிங் பேசியிருந்தார். 

இந்நிலையில், யுவராஜ் சிங்கின் கருத்துடன் முரண்பட்ட கவுதம் கம்பீர், நல்ல பயிற்சியாளராக இருக்க, அதிகமான சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்க வேண்டிய அவசியமுமில்லை. அதுமட்டுமே பயிற்சியாளர் ஆவதற்கான தகுதியுமில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவுதம் கம்பீர், சிறந்த மற்றும் வெற்றிகரமான பயிற்சியாளராக திகழ்வதற்கு, அதிகமான சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அணியின் தேர்வாளர் வேண்டுமென்றால், அதிகமான சர்வதேச போட்டிகளில் ஆடியிருந்தால் நல்லதே தவிர பயிற்சியாளருக்கு அந்த தகுதி தேவையில்லை.

எந்த ஒரு பயிற்சியாளரும், சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் ஒரு வீரருக்கு, பேட்டை பிடித்து ஷாட்டுகளை எப்படி அடிக்க வேண்டும் என்று பயிற்சி கொடுக்கப்போவதில்லை. அப்படி ஒருவர் கொடுத்தாரென்றால், அவர் பேட்ஸ்மேனை மோசமாக்குகிறார் என்றுதான் அர்த்தம். எனவே பயிற்சியாளராக இருப்பவர், அதிகமான சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும் என்பதில்லை.

அதிலும் டி20 போட்டிகளுக்கு வீரர்களை தயார் செய்வது, ஒரேயொரு விஷயத்தில் மட்டும் தான். அது, வீரர்களின் மனநிலையை சீர்படுத்தி சிறப்பான ஆட்டத்தை ஆட ஊக்குவிப்பது மட்டுமே. அதற்கு, ஏன் அதிகமான சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும்? அதிகமான போட்டிகளில் ஆடாதவரும் கூட, சிறந்த, வெற்றிகரமான பயிற்சியாளராக திகழ முடியும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.