ஐபிஎல் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. ஐபிஎல் நடக்கும் இரண்டரை மாதங்களை, கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழாக்காலம் போல கொண்டாடிவருகின்றனர். 

உலகின் பணக்கார டி20 லீக் தொடர் என்பதால், இரண்டே மாதத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதால் வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பு, ஆதரவு மற்றும் ஐபிஎல் விழாக்காலம் போன்றிருப்பதால் அந்த சூழலை ரசித்து மகிழ்வதற்காகவே வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர். 

ஐபிஎல் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை, ஒரு ஆண்டு கூட ஐபிஎல் இல்லாமல் முடியவில்லை. ஐபிஎல் இல்லாமல், கிரிக்கெட் காலண்டரில் ஒரு ஆண்டு முடிவதை யாருமே விரும்பவில்லை. அந்தவகையில், கொரோனா அச்சுறுத்தலால், கடந்த மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் 13வது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பை ஓராண்டு தள்ளிப்போனதால் ஐபிஎல் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13வது சீசன் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் உற்சாகமாக தயாராகிவருகின்றனர். வீரர்களும் பயிற்சியை தொடங்கிவிட்டனர். சிஎஸ்கே அணி, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திலும், மற்ற அணிகள் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்திலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவுள்ளன. 

இந்நிலையில், இந்த ஐபிஎல் சீசன் குறித்து கருத்து தெரிவித்துள்ள,  2 முறை ஐபிஎல் கோப்பையை கேகேஆர் அணிக்கு வென்று கொடுத்த முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான கம்பீர், இந்த ஐபிஎல் கொரோனாவால் துவண்டுபோயுள்ள மக்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் என நம்புகிறார். 

இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், ஐபிஎல் யு.ஏ.இவில் நடக்க போகிறது. ஐபிஎல் எங்கு நடக்கிறது, எப்படி நடக்கிறது, எந்த அணி வெல்கிறது, யார் அதிக ரன் அடிக்கிறார், யார் அதிக விக்கெட் வீழ்த்தினார் என்பதெல்லாம் முக்கியமில்லை. கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து புத்துணர்ச்சியூட்டும் விதமாக ஐபிஎல் அமையும். அந்தவகையில், இந்த ஐபிஎல் சீசன், இதற்கு முந்தைய சீசன்களைவிட முக்கியமான சீசன்; இது நாட்டுக்கான சீசன் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.