இந்திய அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனியின் கெரியர் முடிந்துவிட்டது. தோனிக்கு அடுத்து இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான் என்பதை அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. 

ஐபிஎல்லில் அசத்தலாக ஆடிய ரிஷப் பண்ட், இந்திய அணியில் எடுக்கப்பட்ட பின்னர், சரியாக ஆடவில்லை. விக்கெட் கீப்பிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் சொதப்புகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், அதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் ஏமாற்றமளித்தார் 

இதையடுத்து அவர் தொடர்ந்து விமர்சிக்கப்படுவதால், அவர் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. அந்த அழுத்தத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல், நெருக்கடிக்கு உட்படாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டிய ரிஷப் பண்ட், அந்த அழுத்தத்தை எல்லாம் மண்டைக்கு ஏற்றிக்கொண்டு சரியாக ஆடாமல் திணறிவருகிறார். தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடுவதா அல்லது சூழலுக்கு ஏற்ப அணிக்காக ஆடுவதா என்ற குழப்ப மனநிலையோடு அணுகுவதால், அவரால் சோபிக்கமுடியாமல் போகிறது. 

அவர் சரியாக ஆடாவிட்டாலும், மீண்டும் ஃபார்முக்கு திரும்பும்வரை போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதை தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் தொடர்ந்து உறுதிப்படுத்தி வந்திருக்கின்றனர். 

இதற்கு முந்தைய தொடர்களில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் தவறிழைக்கும் போதும், தவறான ரிவியூ முடிவை எடுக்கும்போதும், தோனி தோனி என ரசிகர்கள் கூச்சலிட்டு ரிஷப் பண்ட்டை கிண்டலடிக்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேப்டன் கோலி ரசிகர்களை கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் அவர் ஃபார்முக்கு திரும்பிவிட்டால், அவரது ஆட்டம் வேற லெவலில் இருக்கும் எனவும் அவர் மேட்ச் வின்னராக ஜொலிப்பார் எனவும் கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அவருக்கு ஆதரவாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார். ரிஷப் குறித்து பேசிய கங்குலி, நான் கோலியின் இடத்தில் இருந்தால், ரிஷப் பண்ட்டை கிண்டலடிக்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லமாட்டேன். அந்த மாதிரியான கிண்டல்களையெல்லாம் எதிர்கொண்டு அதன் மூலம் அவரது வெற்றிக்கான வழியை தேடிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன் என்று கூறிய கங்குலி, அடுத்ததாக கிண்டல் செய்யும் ரசிகர்களையும் தோனியுடன் ரிஷப்பை ஒப்பிடுபவர்களையும் விட்டுவைக்கவில்லை.

தினம் தினம் ஒரு தோனி கிடைக்கமாட்டார். ஒரு தலைமுறைக்கு ஒரு தோனி தான். தோனி தற்போதிருக்கும் இடத்தை பிடிக்க அவருக்கு 15 ஆண்டுகள் தேவைப்பட்டது. எனவே தோனி அளவுக்கு இல்லாவிட்டாலும், அவரை நெருங்குவதற்கே ரிஷப் பண்ட்டுக்கு 15 ஆண்டுகள் தேவைப்படும் என்று கூறினார்.