பிசிசிஐயின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட கங்குலி, நேற்று பதவியேற்றுக்கொண்டார். பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றதுமே செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கங்குலி. அப்போது, இந்தியாவில் ஏதாவது 5 இடங்களில் மட்டும் டெஸ்ட் போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் என்ற கேப்டன் கோலியின் பரிந்துரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்தது. விசாகப்பட்டினம், புனே மற்றும் ராஞ்சி ஆகிய மூன்று இடங்களிலும் டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் விசாகப்பட்டினத்தில் மட்டும்தான், போட்டியை காண ஓரளவிற்கு கூட்டம் வந்தது. புனே மற்றும் ராஞ்சியில் சுத்தமாக கூட்டமே இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் ரசிகர்கள் இருந்தனர். இதையும் படிங்க - கம்பீர், கோலிக்கு அடுத்து ரோஹித் சர்மா தான்.. ஹிட்மேனின் அபாரமான சாதனை

இதுகுறித்து டெஸ்ட் தொடர் முடிந்ததும் கேப்டன் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டை ஏதேனும் 5 இடங்களை தேர்வு செய்து அங்கு மட்டுமே நடத்தலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

கோலியின் இந்த கருத்து குறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி, நமது நாட்டில் நிறைய மாநிலங்கள் இருக்கின்றன. நிறைய மைதானங்களும் உள்ளன. எனவே இதுகுறித்து விராட் கோலியுடன் அமர்ந்து பேசி, அவரது தேவைகளை கேட்டு, அதுகுறித்து விவாதித்துத்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.