கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மத்தியிலிருந்து நான்கு மாதங்களாக எந்த கிரிக்கெட் போட்டியும் நடக்காத நிலையில், கடந்த 8ம் தேதி தொடங்கி, இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் போட்டி நேற்று முடிந்துள்ளது. இந்த போட்டி, கிரிக்கெட் உலகில் நல்ல சமிக்ஞையாக அமைந்துள்ளது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின், இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் மற்றும் டி20 தொடர் நடக்கவுள்ளது. அக்டோபர்-நவம்பர் காலத்தில் ஐபிஎல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதைத்தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆடவுள்ளது. கடந்த முறை 2018ல் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சென்றபோது, நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதல் முறையாக 2018-2019 டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. 

இந்நிலையில், அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறது. கடந்த முறை ஸ்மித் - வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தி தொடரை வென்றுவிட்டது. ஆனால் இந்த முறை, ஸ்மித் - வார்னர் மட்டுமல்லாது, லபுஷேன் என்ற மற்றொரு மிகச்சிறந்த வீரரும் இணைந்துள்ளார். எனவே வரப்போகும் ஆஸ்திரேலிய தொடர் இந்தியாவிற்கு கடும் சவாலாக இருக்கும். 

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே இந்த முறை பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டு துறைகளிலும் சமபலம் வாய்ந்த அணிகளாக திகழும் நிலையில், இந்த சுற்றுப்பயணம் கண்டிப்பாக இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். ஏனெனில் இந்திய அணியில் ரோஹித் - கோலி என்றால் ஆஸ்திரேலியாவில் வார்னர் - ஸ்மித், இந்தியாவிற்கு புஜாரா, ஆஸி.,க்கு லபுஷேன், இந்தியாவிற்கு பும்ரா, ஷமி, இஷாந்த், ஆஸி.,க்கு கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், இந்தியாவிற்கு அஷ்வின்/ஜடேஜா, ஆஸி.,க்கு நேதன் லயன் என இரு அணிகளும் சம்பலம் வாய்ந்த அணிகளாக திகழ்கின்றன. 

எனவே இந்த சுற்றுப்பயணம் மிகக்கடினமாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இண்டர்வியூ ஒன்றில் பேசிய கங்குலி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகக்கடினமானதாக இருக்கும். 2018ல் இருந்ததை போல இருக்காது. அப்போதைய அணியை விட வலிமையான அணியாக இம்முறை இருக்கிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே வலுப்பெற்றிருப்பதால், கடினமான தொடராகத்தான் இருக்கும்.

விராட் கோலி தலைமையிலான அணி, ஆஸ்திரேலியாவில் இம்முறையும் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறேன். என்னை பொறுத்தமட்டில் வெற்றி தான் முக்கியம். வெற்றியை மட்டுமே இந்திய அணியிடமிருந்து எதிர்பார்க்கிற அளவுக்கான தரத்தை செட் செய்திருக்கிறார் கோலி. எனவே அந்த மதிப்பீட்டை குறைத்துக்கொள்ளாத அளவிற்கு நடந்துகொள்ள வேண்டும் என்று கங்குலி தெரிவித்தார்.