விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து ஃபார்மட்டுகளிலும் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுதும் வெற்றிகளை குவித்து சாதனைகளை படைத்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளிலும் டெஸ்ட் தொடர்களை வென்று சாதித்துவருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. 

இந்நிலையில், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று நாடு திரும்ப வேண்டும் என பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார். 

இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இதுவரை ஆடிய 2 டி20 போட்டிகளிலும் வென்றிருக்கிறது. இன்னும் 3 டி20 போட்டிகள் எஞ்சியுள்ளன. அதன்பின்னர் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் அதற்கடுத்து 2 டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. 

இந்திய அணி நியூசிலாந்தில் நன்றாக ஆடிவரும் நிலையில், டெஸ்ட் தொடர் குறித்து பேசிய சவுரவ் கங்குலி, ”ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு சென்றபோது 4-1 என ஒருநாள் தொடரை வென்றோம். ஆனால் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன். அனைத்து விதமான போட்டித்தொடர்களையுமே வெல்ல வேண்டும். ஆனாலும் டெஸ்ட் தொடரை வெல்வது மற்றவற்றை விட ஸ்பெஷல்”. 

இந்திய அணி நியூசிலாந்தில் 9 முறை டெஸ்ட் தொடரில் ஆடியுள்ளது. அதில் வெறும் இரண்டு முறை தான் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. நியூசிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் இந்திய அணியை 5 முறை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. எனவே மிகவும் வலுவாக திகழும் இந்திய அணி இந்த முறை நியூசிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார். 

”தற்போதைய இந்திய அணி அருமையான சிறப்பான அணி. வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். வீரர்கள் களத்தில் நன்றாக ஆடவேண்டுமென்றால், களத்திற்கு வெளியே நிர்வாகம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் அபார நம்பிக்கை கொண்டவன் நான். எனவே விராட் கோலிக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. தேவையில்லாத அழுத்தங்களையோ நெருக்கடிகளையோ எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கோலிக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது” என்று கங்குலி தெரிவித்தார்.