உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும். 

நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆஸ்திரேலிய தொடரில் படுமோசமாக சொதப்பினார். ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடிய நிலையில், நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தில், அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு ஃபார்மில் இல்லாதது அணிக்கு பெரிய ஏமாற்றம். 

நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங் சரியாக ஆடாதது மட்டுமல்லாமல் அவரது ஃபீல்டிங்கும் சரியில்லை.

உலக கோப்பை நெருங்கிய நிலையில், அவர் சொதப்பிவருவதால் உலக கோப்பையில் அவருக்கான இடம் சந்தேகம்தான். ராயுடு சொதப்பிவரும் அதேவேளையில், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடுகிறார். எனவே அவரைக்கூட நான்காம் வரிசையில் இறக்கலாம். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் ராயுடு சொதப்பியதை அடுத்து, நான்காவது போட்டியில் ராயுடு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார். ராகுல் மூன்றாம் வரிசையிலும் கேப்டன் கோலி நான்காம் வரிசையிலும் கடந்த போட்டியில் இறங்கினர். 

இப்படியாக நான்காம் வரிசைக்கான சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, பேட்டிங் ஆர்டரில் நான்காம் வரிசைக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. இன்னும் அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்கு சில வீரர்களுக்கான வாய்ப்பு இருக்கிறது என்று கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

கோலியின் பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. விஜய் சங்கரை நான்காம் வரிசையில் இறக்குவது பேட்டிங் ஆர்டருக்கு வலு சேர்க்கும். உலக கோப்பையில் விஜய் சங்கரை நான்காம் வரிசையில் இறக்கினால், மூன்றாவது வரிசையில் இறங்கும் கோலியும் ஐந்தாவது வரிசையில் இறங்கும் தோனியும் விஜய் சங்கரை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் விஜய் சங்கரிடமிருந்து சிறந்த பேட்டிங்கை பெற முடியும்.