உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பை தொடரில் ஆடும் இந்திய அணி கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்டது. ஒருசில வீரர்களுக்கான இடங்கள் மட்டும் பரிசீலனையில் உள்ளது.

மாற்று விக்கெட் கீப்பர், 4ம் வரிசை வீரர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய வீரர்கள் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த வீரர்களை உறுதி செய்ய ஐபிஎல் தான் கடைசி வாய்ப்பு. 

4ம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகியோர் இறுதி செய்யப்பட வேண்டும். மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். அனுபவ விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை காட்டிலும் ரிஷப் பண்ட்டுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் அவர் தான் உலக கோப்பையில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும் அதற்கு முன்னதாக ஐபிஎல்லில் சிறப்பாக ஆடவேண்டியது அவசியம். ஐபிஎல்லில் ஆடுவதை வைத்துக்கூட இறுதி முடிவு எடுக்கப்படும். 

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரிஷப் பண்ட், அதற்குள்ளாக உலக கோப்பை அணியில் எடுக்கப்பட தீவிரமாக பரிசீலிக்கப்படும் அளவிற்கு உயர்ந்திருப்பது அதீத வளர்ச்சி. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரிஷப் பண்ட். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிலும் அபாரமாக ஆடினார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடி தனது திறமையை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், ஒருநாள் அணியிலும் இடம்பிடித்தார். 

பேட்டிங் பெரிதாக இல்லாவிட்டாலும் இதுவரையிலும் ஓரளவிற்கு நன்றாகவே ஆடியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பினார். இதையடுத்து ரிஷப் பண்ட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் தினேஷ் கார்த்திக்கை உலக கோப்பைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன. 

அந்த குரல்களில் கங்குலியின் குரலும் ஒன்று. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் ரிஷப் பண்ட் தான் என்றாலும் தற்போதைய சூழலில் உலக கோப்பையில் ஆடும் அளவிற்கு தகுதி பெற்றுவிட்டதாக கருதவில்லை என்று அண்மையில் கருத்து தெரிவித்திருந்த கங்குலி, தற்போது நான்காம் வரிசையில் ஆட ரிஷப் பண்ட்டின் பெயரை பரிந்துரைத்துள்ளார். 

டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கங்குலி, அந்த அணியில் ஆடும் ரிஷப் பண்ட்டின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். ஐபிஎல்லில் டெல்லி அணியின் ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு முன் ஒரு பேச்சு; அந்த அணியின் ஆலோசகராக ஆனதற்கு பின் ஒரு பேச்சு என பேசியுள்ளார் கங்குலி. இப்படி முரணாக பேசினால், அவரது எந்த கருத்தை எடுத்துக்கொள்வது? முதலில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டு கருத்தை தெரிவியுங்கள் கங்குலி.