பிசிசிஐ தலைவராக கங்குலி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து செயல்பட்டுவருகிறார். பிசிசிஐ-யின் நிரந்தர தலைவராக கங்குலி நியமிக்கப்படவில்லை. இடைக்கால தலைவராகத்தான் கங்குலி நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இன்னும் ஒருசில மாதங்களில் முடிவடைய உள்ளது. 

இதற்கிடையே கடந்த மார்ச் 28ம் தேதி நடந்த ஐசிசி-யின் பிசிசிஐ பிரதிநிதியாக கங்குலி சேர்க்கப்பட்டார். ஐசிசி-யின் தலைவர் பதவியில் தற்போது இருப்பவரின் பதவிக்காலம் முடியவுள்ளது. ஐசிசி தலைவர் பதவிக்கான போட்டியில் கங்குலி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டை காப்பாற்ற கங்குலியால் தான் முடியும். எனவே கங்குலி தான் ஐசிசி தலைவர் பதவிக்கு சரியான நபர் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் க்ரேம் ஸ்மித் கூட தெரிவித்திருந்தார். 

கங்குலி தலைமைத்துவ பண்புகள் நிறைந்த சிறந்த நிர்வாகி என்பதால், அவர் ஐசிசி தலைவராவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா, கங்குலிக்கும் பிசிசிஐ அதிகாரிகளுக்கும் ஈமெயிலில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். 

அதில், ஐசிசி பொறுப்பிற்கு நியக்கப்படுபவர், பிசிசிஐ பொறுப்பில் இருக்க முடியாது. எனவே பிசிசிஐ விதி 14(9)ன்படி, கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் நீடிக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் சஞ்சீவ் குப்தாவின் இந்த புகார் கேலிக்குரியது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்த பிசிசிஐ அதிகாரி, ஐசிசி தலைவர் பதவியில் கங்குலி நியமிக்கப்பட்டால்தான் சஞ்சீவ் குப்தா சுட்டிக்காட்டிய பிசிசிஐ-யின் 14(9) என்ற விதி செயல்பாட்டிற்கு வரும். எனவே ஐசிசி பதவியில் நியமிக்கப்பட்டால்தான் பிசிசிஐ பதவியில் நீடிக்க முடியாது. பிசிசிஐ பதவியில் இருக்கும் ஒருவரைத்தான் ஐசிசி பதவிக்கு முன்மொழிய முடியுமே தவிர, பிசிசிஐ பதவியில் இல்லாதவரை முன்மொழிய முடியாது. எனவே கங்குலியின் பெயரை முன்மொழிந்ததற்கே அவர் பிசிசிஐ பதவியில் நீடிக்க முடியாது என்று கூறுவது கேலிக்குரியது என்று அந்த பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.