பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கராச்சியில் நடந்துவருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, வெறும் 220 ரன்களுக்கு, முதல் நாள் ஆட்டத்தின் 3வது செசனிலேயே ஆல் அவுட்டானது.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் மட்டுமே அரைசதம் அடித்தார். எல்கர் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரை தவிர மற்ற யாருமே ஓரளவிற்குக்கூட நன்றாக ஆடவில்லை. டுப்ளெசிஸ், வாண்டர்டசன், டி காக், பவுமா ஆகியோர் ஏமாற்றமளிக்க, 220 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் சுருண்டது தென்னாப்பிரிக்க அணி.

இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அபித் அலி(4) மற்றும் இம்ரான் பட்(9) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் ரபாடாவின் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் பாபர் அசாம் 7 ரன்னிலும், நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்ட ஷாஹீன் அஃப்ரிடி ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, 27 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி.

முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் இருந்த அசார் அலியும் ஃபவாத் ஆலமும் 2ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அசார் அலி 51 ரன்னில் மஹராஜின் பந்தில் ஆட்டமிழக்க, ஆலமும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தார். ரிஸ்வான் 33 ரன்களுக்கு இங்கிடியின் பந்தில் ஆட்டமிழந்தார். 

ஃபவாத் ஆலமுடன் ஜோடி சேர்ந்த ஃபஹீம் அஷ்ரஃப் பொறுப்புடன் விக்கெட்டை இழந்துவிடாமல் ஆடி, ஃபவாத் ஆலமுக்கு ஒத்துழைப்பு கொடுக்க, ஃபவாத் ஆலம் சதமடித்தார். ஃபவாத் ஆலம் மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் ஜோடி சிறப்பாக ஆடிவருவதால் பாகிஸ்தான் அணி பெரிய ஸ்கோரை அடிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியை விட, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுவிட்ட பாகிஸ்தான் அணியின் இந்த ஜோடி மேலும் சிறப்பாக ஆடி பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தால், முதல் இன்னிங்ஸ்  ஸ்கோர் வித்தியாசம் பெரியளவில் இருக்கும்.