பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி – கோபத்தில் கிடைத்த பொருளை எல்லாம் உடைக்கும் ரசிகர்கள் – வைரல் வீடியோ!
இந்தியாவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 19ஆவது போட்டியில் பாகிஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் போடுவதற்கு முன்பே ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கடைசியில் 20 ஓவர்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்தார்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா மற்றும் ஹரீஷ் ராஃப் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அமீர் கான் 2 விக்கெட் எடுக்க, ஷாஹீன் அஃப்ரிடி ஒரு விக்கெட் எடுத்துக் கொடுத்தார். பின்னர் எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி ரன்கள் எடுத்தனர்.
எனினும், பாபர் அசாம் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உஸ்மான் கான் 13, ஃபகர் ஜமான் 13, இமாத் வாசீம் 15 ரன்களில் ஆட்டமிழக்க முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். கடைசியில் வந்த ஷதாப் கான் 4, இஃப்திகார் அகமது 5 ரன்களில் வெளியேறவே இறுதியாக பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இதன் மூலமாக பாகிஸ்தான் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து கனடா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடுகிறது. நாளை நடைபெறும் போட்டியில் கனடாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று கடைசி போட்டியில் தோல்வி அடைந்தாலும் இதே நிலை தான். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத அவரது ரசிகர்கள் கோபத்தில் கொந்தளிக்கும் வீடியோ காட்சிகளை பலரும் எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு ரசிகர் டிவியை உடைப்பதற்கு பதிலாக தர்ப்பூசணி பழத்தை தூக்கி போட்டு உடைக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.