பிக்பேஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹரிகேன்ஸ் அணி, உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான டேவிட் மாலனின் அதிரடி அரைசதத்தால்(56 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 75 ரன்கள்) 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது.

165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில், கேப்டன் க்ளென் மேக்ஸ்வெல்லை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. அதனால் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தும் கூட, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே அடித்ததால் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஹரிகேன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஹரிகேன்ஸ் அணியின் பேட்டிங்கின்போது, டேவிட் மாலன் அடித்த சிக்ஸரில், பந்து ரசிகர் ஒருவரின் பீர் கப்பில் விழுந்தது. பந்து விழுந்த பின்னரும், கப்பில் இருந்த பீரை குடித்த ரசிகர், அந்த பந்தை களத்தில் உள்ள வீரரிடம் கொடுக்க ஆரம்பத்தில் மறுத்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து கொடுத்துவிட்டார். எனினும் அந்த பந்து பீர் கப்பில் விழுந்து நனைந்ததால், நடுவர்கள் பந்தை மாற்றிவிட்டனர். அந்த வீடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா யூடியூபில் பதிவிட்டதால் அது செம வைரலாகிவருகிறது.