உலக கோப்பை தொடர் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் ஆடிவருகின்றன. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ், பவுலிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில், பேர்ஸ்டோ, ராய், இயன் மோர்கன், பட்லர், மொயின் அலி என அதிரடி பேட்டிங் ஆர்டரை கொண்ட இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார் டுபிளெசிஸ். 

முதல் ஓவரை வீசிய இம்ரான் தாஹிர், இரண்டாவது பந்திலேயே பேர்ஸ்டோவை வீழ்த்தினார். ஒரு ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்த போதிலும், அதன்பின்னர் ரூட்டும் ராயும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டை முதல் ஓவரை இழந்திருந்தாலும், அதனால் ரன்ரேட் குறைந்துவிடாதபடி பார்த்துக்கொண்ட ராயுடும் ரூட்டும் அரைசதம் அடித்தனர். ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறிவிட்டனர். 

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராய், 19வது ஓவரில் ஃபெலுக்வாயோவிடம் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். ராய் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலேயே ரபாடாவிடம் விக்கெட்டை இழந்தார். முதல் விக்கெட்டுக்கு பிறகு நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய ராயும் ரூட்டும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் இயன் மோர்கனும் பென் ஸ்டோக்ஸும் சிறப்பாக ஆடிவருகின்றனர்.

2 விக்கெட்டுகள் அடுத்தடுத்த ஓவரில் விழுந்தும் கூட, தென்னாப்பிரிக்க பவுலர்களால் இங்கிலாந்தின் ரன் வேகத்தை குறைக்க முடியவில்லை. ஸ்டோக்ஸ் நிதானமாக ஆட, மோர்கன் அடித்து ஆடிவருகிறார். இங்கிடி வீசிய 26வது ஓவரின் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு பந்துகளிலும் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசினார். 

தனது 200வது போட்டியாக இந்த போட்டியை ஆடிவரும் மோர்கன், ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். 50 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார் மோர்கன். அவரும் ஸ்டோக்ஸும் அபாரமாக ஆடிவருகின்றனர். இவர்களுக்கு பிறகு பட்லர், மொயின் அலி என பேட்டிங் ஆர்டர் வலுவாக இருப்பதால், 350 ரன்களுக்கு மேல் இங்கிலாந்து அணி குவிப்பது உறுதி.