Asianet News TamilAsianet News Tamil

#SLvsENG 2வது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து அபார வெற்றி..! இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
 

england whitewashed sri lanka in 2 match test series
Author
Galle, First Published Jan 25, 2021, 5:51 PM IST

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கடந்த 22ம் தேதி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, ஆஞ்சலோ மேத்யூஸின் அனுபவ சதம்(110), சண்டிமால்(52), டிக்வெல்லா(92), தில்ருவான் பெரேரா(67) ஆகியோரின் பொறுப்பான அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 381 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் மட்டுமே மிகச்சிறப்பாக ஆடி சதமடித்தார். அவரை தவிர மற்ற வீரர்கள் அனைவருமே இலங்கையின் இடது கை ஸ்பின்னர் எம்பல்டேனியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். அபாரமாக ஆடி சதமடித்த ஜோ ரூட், இரட்டை சதத்தை நெருங்கிய நிலையில், 186 ரன்களுக்கு ஆட்டமிழந்து 14 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார். முதல் டெஸ்ட்டில் இரட்டை சதமடித்த ரூட், இந்த டெஸ்ட்டிலும் இரட்டை சதமடித்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை நழுவவிட்டார். ஜோஸ் பட்லரும் அரைசதம் அடிக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 344 ரன்கள் அடித்தது.

37 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, இந்த இன்னிங்ஸில் படுமோசமாக சொதப்பினர். மேத்யூஸ், குசால் பெரேரா, டிக்வெல்லா, சண்டிமால், திரிமன்னே என முக்கியமான வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் வெறும் 126 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி. இங்கிலாந்து அணியில் ஜாக் லீச் மற்றும் டோமினிக் பெஸ் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும் கேப்டன் ரூட் 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதையடுத்து இலங்கை அணி வெறும் 163 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றதால் 164 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டும் இங்கிலாந்து அணி 17 ரன்னிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. பேர்ஸ்டோ 29 ரன்களுக்கும், கேப்டன் ஜோ ரூட் 11 ரன்னிலும், லாரன்ஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் டோமினிக் சிப்ளி அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று பொறுப்புடன் போட்டியை முடித்து கொடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடியதுடன், அதிரடியாக ஆடி போட்டியை விரைவில் முடித்துவைத்தார் ஜோஸ் பட்லர். பட்லர் 48 பந்தில் 46 ரன்கள் அடித்தார். அரைசதம் அடித்த சிப்ளி 144 பந்தில் 56 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் வென்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios