உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க வீரர் பேர்ஸ்டோ இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறிய போதிலும், ரூட்டும் ராயும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர்.

முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தபோதிலும் ரன்ரேட் குறையாத அளவிற்கு அடித்து ஆடினர். ராய் மற்றும் ரூட் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்ததோடு, அடுத்தடுத்த ஓவரில் விக்கெட்டையும் இழந்தனர். 18 மற்றும் 19வது ஓவர்களில் ராயும் ரூட்டும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களத்திற்கு வந்த இயன் மோர்கனும் பென் ஸ்டோக்ஸும் மீண்டுமொரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

பென் ஸ்டோக்ஸ் நிதானமாக தொடங்க, களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடினார் கேப்டன் மோர்கன். இங்கிடி வீசிய 26வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசினார். 50 பந்துகளில் அரைசதம் கடந்த மோர்கன், 57 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, அதன்பின்னர் பட்லர், மொயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் சொற்ப ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணியின் ரன்ரேட் குறைந்தது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் நிலைத்து ஆடிய ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்து சதத்தை நெருங்கினார். ஆனால் 89 ரன்கள் குவித்த ஸ்டோக்ஸ் 49வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 311 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர்கள் சொதப்பியதால், அந்த அணி எடுத்திருக்க வேண்டிய ஸ்கோரில் 30 ரன்கள் குறைந்தது.

312 ரன்கள் என்பதும் சவாலான இலக்குதான். 312 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்க அணி விரட்டிவருகிறது.