3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து அணி 432 ரன்களை குவித்துள்ளது. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா(19), ரஹானே(18) ஆகிய இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாததன் விளைவாக, முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ்(61) மற்றும் ஹசீப் ஹமீத்(68) ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 3ம் வரிசையில் இறங்கிய டேவிட் மலானும் அருமையாக ஆடி 70 ரன்களை குவித்தார். கேப்டன் ஜோ ரூட் வழக்கம்போலவே அபாரமாக ஆடி இந்த இன்னிங்ஸிலும் சதமடித்தார். 121 ரன்கள் குவித்த ஜோ ரூட்டை பும்ரா போல்டாக்கி அனுப்பினார்.

அதன்பின்னர் இறங்கிய பேர்ஸ்டோ, பட்லர், சாம் கரன் ஆகிய வீரர்கள் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. அவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்வரிசையில் டெயிலெண்டரான க்ரைக் ஓவர்டன் 32 ரன்கள் அடித்தார். 3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசன் தொடங்கிய சில நிமிடங்களில் இங்கிலாந்தின் கடைசி 2 விக்கெட்டுகளையும் இந்திய அணி வீழ்த்த, முதல் இன்னிங்ஸில் 432 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

இதையடுத்து 354 ரன்கள் என்ற மிகப்பெரிய பின்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது இந்திய அணி. 354 ரன்களை அடித்து, முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்துவிட்டு, அதன்பின்னர் அடிக்கும் ஸ்கோர் தான் இங்கிலாந்துக்கான இலக்கு. எனவே மிகப்பெரிய சவாலுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவருகிறது இந்திய அணி.