இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று நடந்துவருகிறது.

முதல் டி20 போட்டி மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது. 163 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 160 ரன்கள் அடித்து 2 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச்சும் வார்னரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 11 ஓவரில் 98 ரன்களை குவித்த நிலையில், அவர்கள் அவுட்டானதும் ஆட்டம் தலைகீழாக திரும்பியது. கடைசி வரை மார்கஸ் ஸ்டோய்னிஸ் களத்தில் இருந்தும் கூட, அவரால் இலக்கை வெற்றிகரமாக எட்ட முடியவில்லை.

19 ஓவரில் 148 ரன்கள் அடித்திருந்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டாம் கரன் அந்த ஓவரை அருமையாக வீசி 12 ரன்னில் கட்டுப்படுத்தினார். இங்கிலாந்து 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

அந்த போட்டி மிகவும் பரபரப்பாக சென்றதால், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஆடிய இங்கிலாந்து அணி நேரத்தை கவனிக்காததால், ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது இங்கிலாந்து அணி. ஐசிசி விதி 2.22ன்படி, பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டது விதிமீறல் என்பதால், இங்கிலாந்து அணியின் அனைத்து வீரர்களுக்கும் போட்டி ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதம் விதித்தது ஐசிசி.