இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்தது. எனவே தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் வெற்றி முனைப்புடன் களமிறங்கின. 

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று மாற்றங்களுடனும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு மாற்றத்துடனும் களமிறங்கியது. மான்செஸ்டரில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் களமிறங்கினர். கீமார் ரோச் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் கடைசி பந்திலேயே டோமினிக் சிப்ளியை எல்பிடபிள்யூ செய்து அவுட்டாக்கினார். கடந்த போட்டியில் சதமடித்த சிப்ளியை முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் ரோச்.

 

இதையடுத்து பர்ன்ஸுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டிருந்தனர். இருவருமே தலா 10 ஓவர்கள் பேட்டிங் ஆடி களத்தில் நிலைத்துவிட்ட நிலையில், ரூட் 17 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

47 ரன்களுக்கே இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் பர்ன்ஸுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். உணவு இடைவேளை முடிந்து இரண்டாவது செசன் தொடங்கி நடந்துவருகிறது. பர்ன்ஸ் அரைசதத்தை நெருங்கியுள்ளார். இங்கிலாந்து அணி 29 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் அடித்து ஆடிவருகிறது.