உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்ற பரவலான கருத்து உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணியும் மிகச்சிறப்பாக உள்ளது. ஸ்மித் மற்றும் வார்னரின் வருகைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எழுச்சி கண்டுள்ளது.

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள வாய்ப்புள்ள அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளுமே பயிற்சி போட்டியில் தோற்றன. இந்திய அணி நியூசிலாந்திடமும் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடமும் தோற்றன. 

இங்கிலாந்து அணியில் கேப்டன் இயன் மோர்கன் மற்றும் அடில் ரஷீத் ஆகிய இருவருமே காயம் காரணமாக நேற்றைய போட்டியில் ஆடவில்லை. ஜோ ரூட்டின் தாத்தா இறந்துவிட்டதால் அவரும் சென்றுவிட்டார். அதனால் நேற்றைய போட்டியில் இவர்கள் மூவருமே ஆடவில்லை. 

இங்கிலாந்து அணியில் ஏற்கனவே இயன் மோர்கன் மற்றும் அடில் ரஷீத் காயத்தில் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஃபாஸ்ட் பவுலர்கள் மார்க் உட், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஸ்பின் பவுலர் டாவ்சன் ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது. 

மார்க் உட் தனது 4வது ஓவரை வீசும்போது காலில் காயம் ஏற்பட்டதால் பாதியில் பந்துவீசாமல் பெவிலியனுக்கு திரும்பினார். அவருக்கு இடது கால் ஸ்லிப் ஆனதால் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல அவருக்கு பதிலாக ஃபீல்டிங் செய்ய வந்த ஜோஃப்ரா ஆர்ச்சரும் காயமடைந்தார். அதனால் ஃபீல்டிங் செய்ய வேற வீரர் இல்லாததால் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய துணை பயிற்சியாளருமான காலிங்வுட் ஃபீல்டிங் செய்தார். 

43 வயதான காலிங்வுட், இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக உள்ளார். இயன் மோர்கன், அடில் ரஷீத், மார்க் உட், ஆர்ச்சர் ஆகிய நால்வரும் ஃபீல்டிங் செய்ய முடியாததால் வேற வழியில்லாமல் காலிங்வுட் கொஞ்ச நேரம் ஃபீல்டிங் செய்தார். 

ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸில் 44வது ஓவரில் ஃபீல்டிங் செய்தபோது ஸ்பின் பவுலர் டாவ்சனுக்கும் காயம் ஏற்பட்டது. ஆனால் இதெல்லாம் பெரிய காயங்களாக இல்லை. எனினும் காயத்தின் தன்மையை அறிந்து அவர்களது முழு உடற்தகுதியை உறுதி செய்ய வேண்டியிருந்ததால் அவர்களால் சில ஓவர்கள் ஃபீல்டிங் செய்யமுடியவில்லை.