ராஞ்சியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

முதல் நாள் ஆட்டத்தில் கடைசி செசன் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்திய வீரர்கள் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக ஆடி விரைவில் ஸ்கோர் செய்துவிட்டு டிக்ளேர் செய்தது இந்திய அணி. நேற்றைய ஆட்டத்தின் டி பிரேக்கிற்கு பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கியது தென்னாப்பிரிக்க அணி. 

நேற்றைய ஆட்டத்தின் கடைசி செசனும் மழையால் பாதிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அணி நேற்றைய ஆட்டத்தில் வெறும் 5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டிருந்தது. அதற்குள்ளேயே தொடக்க வீரர்கள் எல்கர் மற்றும் டி காக்கின் விக்கெட்டை இழந்துவிட்டது. இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா. 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தை டுப்ளெசிஸும் ஹம்ஸாவும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டுப்ளெசிஸ் ஆட்டமிழந்துவிட்டார். முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை அவுட் ஸ்விங்காக வீசினார் உமேஷ் யாதவ். பந்து பிட்ச் ஆன இடத்தைவைத்து, அதை டுப்ளெசிஸ் கணித்து அதற்கேற்ப பேட்டை ரிலீஸ் செய்ய, பந்து அவுட் ஸ்விங்காகி ஆஃப் ஸ்டம்பை தாக்கியது. கிளீன் போல்டான டுப்ளெசிஸ், உமேஷ் யாதவின் துல்லியமான அவுட் ஸ்விங்கை கண்டு வியந்தபடியே பெவிலியனுக்கு திரும்பினார். 

இதையடுத்து ஹம்ஸாவுடன் பவுமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அடித்து ஆடி ரன்களை சேர்த்தது. குறிப்பாக ஹம்ஸா, இந்திய அணியின் பவுலிங்கை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அடித்து ஆடினார். எளிதாக பவுண்டரிகளை விளாசி ஸ்கோர் செய்த அவர், அரைசதம் அடித்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அவர், 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 62 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஜடேஜாவின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 

அவர் அவசரப்படாமல் நிதானமாக ஆடியிருந்தால், இன்னும் நன்றாக ஸ்கோர் செய்திருப்பார். அணியையும் வலுவான நிலைக்கு அழைத்து சென்றிருப்பார். ஏனெனில் அவரது ஆட்டம் மிகவும் தெளிவாக இருந்தது. சிறப்பாக பேட்டிங் செய்த அவர், அனைத்து பந்துகளிலும் ரன் எடுக்கும் முனைப்பில் ஆடியதால்தான் அவுட்டானாரே தவிர, தடுப்பாட்டம் ஆடியிருந்தால் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடித்திருப்பார். 

ஹம்ஸா அவுட்டானதும், அவருடன் இணைந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த பவுமாவும் 32 ரன்களில் வீழ்ந்தார். பவுமாவின் விக்கெட்டை அறிமுக வீரர் நதீம் வீழ்த்தினார். இதையடுத்து களத்திற்கு வந்த கிளாசனையும் 6 ரன்களில் ஜடேஜா வீழ்த்தினார். 119 ரன்களுக்கே தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

ஜார்ஜ் லிண்டேவும் டேன் பீட்டும் இணைந்து ஆடிவருகின்றனர். இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் அடித்துள்ளது. இந்திய ஸ்பின்னர்கள் நன்றாக வீசிக்கொண்டிருப்பதால், இன்னும் 4 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திவிடுவார்கள்.