ஐபிஎல் 13வது சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், ரவி பிஷ்னோய், இஷான் கிஷன் உள்ளிட்ட பல இளம் வீரர்கள் இந்த சீசனில் அருமையாக ஆடினர்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ராகுல் சாஹர் ஆகிய இருவரும் கண்டிப்பாக இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுவார்கள் என இங்கிலாந்து முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் டோமினிக் கார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டோமினிக் கார்க், மும்பை இந்தியன்ஸ் அணி 2 மிகச்சிறந்த வீரர்களை பெற்றிருக்கிறது. சூர்யகுமார் யாதவ் மற்றும் ராகுல் சாஹர் ஆகிய இருவரும் கண்டிப்பாக இந்திய அணிக்காக ஆடுவார்கள் என்றார்.

சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடி 15 போட்டிகளில் 150 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 461 ரன்களை குவித்துள்ளார். லெக் ஸ்பின்னரான ராகுல் சஹார் இந்த சீசனில் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், நல்ல வெரைட்டியை பெற்றிருப்பதுடன், ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு முக்கியமான ஸ்பெல்களை வீசுகிறார்.