தியோதர் டிராபி இறுதி போட்டி ராஞ்சியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் பார்த்திவ் படேல் தலைமையிலான இந்தியா பி அணியும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்தியா சி அணியும் மோதின.

முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா பி அணி, கேதர் ஜாதவின் பொறுப்பான அரைசதம் மற்றும் விஜய் சங்கர், கிருஷ்ணப்பா கௌதமின் அதிரடியான பேட்டிங்கால் 50 ஓவரில் 283 ரன்களை குவித்தது. கேதர் ஜாதவ் 86 ரன்கள் அடித்தார். விஜய் சங்கர் 33 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார். கிருஷ்ணப்பா கௌதம், 49வது ஓவரில் களத்திற்கு வந்து, வெறும் 10 பந்துகளில் 35 ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

284 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்தியா சி அணி, 50 ஓவரில் 232 ரன்கள் மட்டுமே அடித்ததால் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா சி அணியில் மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், தினேஷ் கார்த்திக், சூர்யகுமார் யாதவ் ஆகிய முக்கிய வீரர்கள் யாருமே சரியாக ஆடவில்லை. அதன் விளைவாகத்தான் அந்த அணி 232 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது. இதையடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா பி அணி தியோதர் டிராபியை வென்றது. 

இந்த போட்டியில் தோல்வியடைந்த இந்தியா சி அணியின் சீனியர் வீரரும் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக், பேட்டிங் சரியாக ஆடவில்லை என்றாலும், ஒரு சிறப்பான கேட்ச்சை பிடித்து காண்போரை மிரட்டினார். இஷான் போரெல் வீசிய பந்து பார்த்திவ் படேலின் பேட்டில் எட்ஜாகி சென்றது. கிட்டத்தட்ட முதல் ஸ்லிப் ஃபீல்டரிடம் சென்ற அந்த பந்தை அபாரமாக டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார் தினேஷ் கார்த்திக். அந்த மிரட்டலான கேட்ச்சை ஸ்லிப்பில் நின்று கண்டு வியந்துபோன மயன்க் அகர்வாலும் சூர்யகுமாரும் தினேஷ் கார்த்திக்கை கொண்டாடினர். அந்த வீடியோ இதோ..