2004ம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக், அணியில் தனக்கான இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார். இந்திய அணியில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் வெறும் 91 ஒருநாள் போட்டிகளிலும் 26 டெஸ்ட் போட்டிகளிலும் மட்டுமே ஆடியுள்ளார். அவ்வப்போது அணியில் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாகவே இருந்தார். அவரும் தொடர்ச்சியாக இந்திய அணியில் தனக்கான இடத்திற்காக காத்து கொண்டிருந்தார். ஆனால் இந்திய அணியில் அவருக்கான இடம் கிடைக்கவே இல்லை. 

தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக், கடந்த  ஆண்டு நடந்த நிதாஹஸ் டிராபி டி20 தொடரின் இறுதி போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணியை திரில் வெற்றி பெற செய்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக டி20 அணியில் தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டார்.

உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் தினேஷ் கார்த்திக்கிற்கும் அணியில் இடமளிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக், அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாக ஆடினார். பெரிய இன்னிங்ஸை ஆட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் நன்றாகவே ஆடினார். குறிப்பாக போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்கும் ஃபினிஷர் வேலையை நன்றாக செய்தார். 

பேட்டிங்கிற்கு அப்பாற்பட்டு தினேஷ் கார்த்திக் சிறந்த விக்கெட் கீப்பர். ரஞ்சி டிராபி உட்பட நிறைய உள்நாட்டு போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்த அனுபவம் கொண்டவர். ஐபிஎல் தொடரில் அவர் ஆடும் அணிகளில் அவர் தான் நிரந்தர விக்கெட் கீப்பர்.

உலக கோப்பையில் தோனிக்கு அடுத்து மாற்று விக்கெட் கீப்பர் ஒருவர் அணிக்கு தேவை. அந்த இடத்திற்கு அனுபவ விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்கையே அழைத்து செல்லலாம். ஆனால் தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் தினேஷ் கார்த்திக்கைவிட இளம் வீரர் ரிஷப் பண்ட்டின் மீதே ஆர்வமாக உள்ளனர். அதன் விளைவாக ஆஸ்திரேலிய எதிராக நடந்துவரும் ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்பட்டார்.

தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் அறிமுகமானதிலிருந்து அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டதேயில்லை. அவ்வப்போது வாய்ப்புகள் வழங்கப்படுவதும் பின்னர் நீக்கப்படுவதுமாகவே இருந்தார். ஆனாலும் அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காத மனவேதனை அவருக்கு இருந்தாலும், அதையெல்லாம் கடந்து கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவிற்கு ஆடியுள்ளார். 

இந்நிலையில், இந்த உலக கோப்பைக்கு தினேஷ் கார்த்திக் அழைத்து செல்லப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அதுவும் ரிஷப் பண்ட்டால் தடைபட்டதாக தெரிந்தது. ஆனால் தினேஷ் கார்த்திக்கிற்கான வாய்ப்பு தற்போது பிரகாசமாகியுள்ளது. உலக கோப்பைக்கு மாற்று விக்கெட் கீப்பராக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கை அழைத்து செல்ல வேண்டும் என்பதுதான் முன்னாள் கேப்டன் கங்குலியின் கருத்து. ரிஷப் பண்ட் இந்த உலக கோப்பைக்கு தேவையில்லை. அவர் அவருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கலாம் என்று கங்குலி ஏற்கனவே அதிரடியாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்ட்டை பரிசோதிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி மொஹாலியில் நேற்று நடந்த நான்காவது போட்டியில் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். பேட்டிங் ஓரளவிற்கு ஆடினாலும் விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பினார். டர்னரை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பை அவர் தவறவிட்டதுதான் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. 

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியது, உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கான வாய்ப்பை வலுவாக்கியுள்ளது. உலக கோப்பையில் ரிஷப் பண்ட் நேற்று செய்ததுபோன்ற தவறுகளை செய்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பேட்டிங்கிற்கு அப்பாற்பட்டு மாற்று விக்கெட் கீப்பராக எடுக்கப்படுபவர் சிறந்த விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும். அந்த வகையில் உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தென்பட தொடங்கியுள்ளன.