உள்நாட்டு கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். பேட்டிங், பவுலிங் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு பல மோதல்களும், ஸ்லெட்ஜிங்குகளும் அரங்கேறும். 

பரபரப்பு, மோதல், ஸ்லெட்ஜிங் ஆகியவை இல்லாமல் தமிழ்நாடு - கர்நாடக அணிகளுக்கு இடையேயான போட்டியே இருக்காது. அந்தளவிற்கு இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி மிகக்கடுமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். 

இந்நிலையில், ரஞ்சி டிராபி தொடரில் இரு அணிகளும் மோதிய போட்டி திண்டுக்கல்லில் நடந்தது. இந்த போட்டியில் கர்நாடக அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின்னர் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வெளியே கர்நாடக கேப்டன் கருண் நாயரை தினேஷ் கார்த்திக் ஒரு காட்டு காட்டிவிட்டார். 

விஜய் ஹசாரே இறுதி போட்டி, சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதி போட்டி ஆகிய இறுதி போட்டிகளிலும் கர்நாடக அணியிடம் தோற்று தமிழ்நாடு அணி கோப்பையை இழந்தது. ஏற்கனவே அந்த வெறுப்பில் இருந்த தமிழ்நாடு அணி, ரஞ்சி டிராபியிலாவது கர்நாடக அணியை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருந்தனர். அதற்கேற்றாற்போலவே, தமிழ்நாடு அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு வெறும் 181 ரன்கள் தான் தேவைப்பட்டது. 

ஆனால் கர்நாடக அணியின் சுழற்பந்துவீச்சாளர் கிருஷ்ணப்பா கௌதமின் சுழலில் சிக்கிய தமிழ்நாடு பேட்ஸ்மேன்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். கௌதம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி கர்நாடக அணியை வெற்றி பெற செய்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் தமிழ்நாடு அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்று கொடுத்தார் கர்நாடக பவுலர் கௌதம். தமிழ்நாடு அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

போட்டிக்கு பின்னர், இரு அணிகளின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு மத்தியில் வெளியே, கர்நாடக கேப்டன் கருண் நாயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தினேஷ் கார்த்திக். தமிழ்நாடு அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக், கடுங்கோபத்துடன் கருண் நாயரை திட்டினார். மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பதற்காக, களத்தில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு வீரர்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாகவும், அவர்களை பதற்றத்திலேயே வைத்திருப்பதற்காகவும், கர்நாடக வீரர்கள் அடிக்கடி அம்பயரிடம் அவுக்கு அப்பீல் செய்துகொண்டே இருந்தனர். ஸ்லெட்ஜிங் செய்யும் வகையில் பேசிக்கொண்டும் இருந்துள்ளனர். 

ஏற்கனவே இரண்டு ஃபைனல்களில் தோற்று கோப்பையை இழந்த கடுப்பில் இருக்கும் தமிழ்நாடு அணிக்கு, இந்த போட்டியில் கடைசி ஓவரில் தோல்வியை தழுவியது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே விரக்தியில் இருந்திருப்பார் தினேஷ் கார்த்திக். இதில், கர்நாடக வீரர்கள் அடிக்கடி அப்பீல் செய்து கவனச்சிதறல் ஏற்படுத்தியதால் கூடுதல் கோபமடைந்த அவர், கருண் நாயரிடம் அதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.