உலக கோப்பை அரையிறுதியில் 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே தலா ஒரு ரன்னில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின்னர் தினேஷ் கார்த்திக் அணியை காப்பாற்றுவார் என நினைத்தால் அவரும் 6 ரன்களில் நடையை கட்டினார். 

உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 211 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டு தொடர்ந்து பெய்ததால் நேற்று ஆட்டம் தடைபட்டது. அதனால் எஞ்சிய போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இன்றைய ஆட்டம் தொடங்கியதும் புவனேஷ்வர் குமார் பவுலிங்கை தொடர்ந்தார். எஞ்சிய 23 பந்துகளில் 27 ரன்கள் அடித்த நியூசிலாந்து அணி 239 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. 

240 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, ஹென்ரி வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு ரன்னுக்கு வெளியேறினார். அதற்கு அடுத்த ஓவரில் ட்ரெண்ட் போல்ட்டின் பந்தில் விராட் கோலி எல்பிடபிள்யூ ஆனார். விராட் கோலி தான் ஆடியாக வேண்டிய கட்டாயம் இருந்ததால் ரிவியூ எடுத்தார். பந்து உயரமாக சென்றது; ஆனால் பந்தின் கீழ் பகுதி கொஞ்சமாக ஸ்டம்பில் பட்டது. அது அம்பயர் கால் என்பதால் கோலியும் ஒரு ரன்னில் நடையை கட்டினார்.

அதற்கு அடுத்த ஹென்ரியின் அடுத்த ஓவரில் ராகுலும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணியின் நிலை பரிதாபமானது. 5 ரன்களுக்கே இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி டாப் ஆர்டரையே அதிகமாக சார்ந்திருந்த நிலையில், டாப் ஆர்டர் மூவருமே தலா ஒரு ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினர். 

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் நீண்டகாலமாக போராடிவந்த தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த போட்டியின் மூலம் நல்ல இரை கிடைத்தது. முக்கியமான இந்த போட்டியில் நெருக்கடியான சூழலில் பொறுப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தனது இத்தனை ஆண்டுகால காத்திருப்புக்கு கிடைத்த செம இரையை வீணடித்தார் தினேஷ் கார்த்திக். 

பார்ட்னர்ஷிப் தான் முக்கியம் என்பதை உணர்ந்து அவசரப்படாமல் பொறுமை காத்த தினேஷ் கார்த்திக் ஒரேயொரு பவுண்டரியுடன் 6 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், இவரும் ஹென்ரியின் பந்தில் ஆட்டமிழந்தார். இன்றைய போட்டியில் ஒட்டுமொத்த தேசமே தினேஷ் கார்த்திக் தனது அனுபவத்தை பயன்படுத்தி ஆடுவார் என்று எதிர்பார்த்திருக்கும். இன்றைய போட்டியில் பொறுப்புடன் பெரிய இன்னிங்ஸ் ஆடியிருந்தால் சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பார். ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட்டார். 

தற்போது ரிஷப்பும் பாண்டியாவும் ஆடிவருகின்றனர்.