சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் சாதனைகளை ஒவ்வொன்றாக தகர்த்துவருகிறார். இதுவரை 73 சர்வதேச சதங்களை விளாசியுள்ள கோலி, சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை தகர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எதிரணிகளுக்கு சொம்மசொப்பனமாக திகழும் கோலி, ரன்களை குவிக்க வேண்டும் என்ற தீராத வேட்கை கொண்டவர். குறிப்பாக இலக்கை விரட்டுவதில் வல்லவர் விராட் கோலி. அவர் அடித்த சதங்களில் பெரும்பாலானவை, இரண்டாவது பேட்டிங்கில் இலக்கை விரட்டும்போது அடிக்கப்பட்டவை. நெருக்கடியை சமாளித்து ஆடி, ரன்களை குவிப்பது கோலிக்கு கை வந்த கலை. 

2008ம் ஆண்டில் அறிமுகமான விராட் கோலி, 12 ஆண்டுகளில் அபரிமிதமான ரன்களை குவித்ததுடன், இந்திய அணியின் கேப்டனாகவும் உயர்ந்துள்ளார். இந்திய அணிக்கு 2008ல் அண்டர் 19 உலக கோப்பையை வென்று கொடுத்த விராட் கோலி, அடுத்த சில மாதங்களிலேயே இந்திய அணியிலும் இடம்பிடித்துவிட்டார். 

இந்நிலையில், அவரை 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்த தலைமை தேர்வாளரான திலீப் வெங்சர்க்கார், கோலியை தேர்வு செய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள திலீப் வெங்சர்க்கார், 2008ல் ஆஸ்திரேலியாவில் நடந்த வளர்ந்துவரும் வீரர்கள் தொடரில் இந்தியா ஏ அணியில் விராட் கோலி ஆடினார். அந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்துடன் இந்தியா ஆடியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 240-250 ரன்கள் அடித்தது. இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரராக விராட் கோலி இறங்கி ஆடினார். மிகச்சிறப்பாக ஆடி சதமடித்த கோலி 123 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.

கோலியின் அந்த இன்னிங்ஸில் என்னை கவர்ந்த விஷயம் என்னவென்றால், சதமடித்ததும் அவுட்டாகிவிடாமல், கடைசி வரை களத்தில் நின்று இலக்கை எட்டி, அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அவரது அந்த முதிர்ச்சியான பேட்டிங் என்னை கவர்ந்தது. அவரது மனவலிமை என்னை வியக்கவைத்தது. அதனால் தான் அவரை இந்திய அணியில் தேர்வு செய்தேன். அதன்பின்னர் நடந்தது வரலாறு; அனைவரும் அறிந்ததே என்றார் திலீப் வெங்சர்க்கார்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதற்கேற்ப, இன்றைக்கு தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் சேஸிங் மன்னனாகவும் திகழும் விராட் கோலி, இளம் வயதிலேயே, கடைசி வரை களத்தில் நின்று இலக்கை விரட்டி அணிக்காக வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.