உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பையில் உண்மையாகவே இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தான் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. 

இங்கிலாந்து அணியை இந்த லிஸ்ட்டில் சேர்க்க முடியாது. ஏனெனில் வலுவான அணியாக திகழ்ந்தாலும், மற்ற அணிகளிடம் தோல்விகளை தழுவிய பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் இங்கிலாந்து தோற்றது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது. எனினும் இந்த தோல்விகள் இங்கிலாந்துக்கு மரண அடிதான். 

ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகின்றன. இலங்கைக்கு எதிரான தோல்வியை அடுத்து இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு சற்றே தளர்ந்துள்ளது. அந்த அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஆனால் இங்கிலாந்து அணிக்கு அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் இங்கிலாந்து அடுத்து மோதப்போகும் மூன்று அணிகளும் வலுவான அணிகள். ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து என புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் அணிகளை எதிர்கொள்கிறது. 

இந்திய அணி, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நல்ல அணிகளை வீழ்த்தியுள்ளது. நியூசிலாந்து அணியுடனான போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது. இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவரும் நிலையில், இந்திய அணிக்கு எந்த அணி சவாலாக திகழும் என முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய திலீப் வெங்சர்க்கார், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே இங்கிலாந்து அணி சிறந்து விளங்குகிறது. எனவே இந்திய அணி ஒரு அணிக்கு எதிராக திணறும் என்றால் அது இங்கிலாந்து தான் என்று தெரிவித்துள்ளார். 

ஆனால் இலங்கைக்கு எதிரா இங்கிலாந்து ஆடுனத பார்த்தா அப்படிலாம் தெரியலயே....