ஐபிஎல்லில் 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. 

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக திகழும் தோனி தலைமையிலான சிஎஸ்கே மற்றும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுமே நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.
 
வரும் 23ம் தேதி 12வது சீசன் தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் அனைத்து அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதன்முறையாக இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் யுவராஜ் சிங், வலைப்பயிற்சியில் முதல் பந்தையே பெரிய ஷாட் ஆடிய வீடியோவை அந்த அணி நிர்வாகம் டுவிட்டரில் பகிர்ந்திருந்தது.

இந்நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனி, வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை அந்த அணி டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. பொதுவாக ஸ்பின் பவுலிங்கில் சற்று திணறும் தோனி, ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்டு பயிற்சி எடுத்தார். அப்போது சில பெரிய ஷாட்டுகளை அடித்து பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கடந்த சீசனில் தோனி அபாரமாக ஆடினார். முதல் போட்டி கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு எதிராக சென்னையில் நடக்க உள்ளது. கடந்த சீசனில் ஒரேயொரு போட்டி மட்டுமே சென்னையில் நடைபெற்றது. எஞ்சிய போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டன. எனவே இந்த சீசனில் சிஎஸ்கேவின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.