நடப்பு உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு மிகச்சிறப்பானதாக அமைந்துள்ளது. லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு போட்டியில் மட்டுமே தோற்று 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிப்பது ரோஹித், விராட் கோலி மற்றும் பும்ரா தான். இவர்கள் மூவரையும் தான் இந்திய அணி அதிகமாக சார்ந்திருக்கிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக திகழும் நிலையில் மிடில் ஆர்டரின் வலுவற்றிருக்கிறது. 

உலக கோப்பைக்கு முன்னர் இந்திய அணியில் இருந்துவந்த மிடில் ஆர்டர் சிக்கல் உலக கோப்பையிலும் தொடர்கிறது. மிடில் ஆர்டரில் மந்தமாக ஆடுவதுபோல் தெரிந்தாலும் தோனி ஒருவர் மட்டுமே நம்பிக்கையளிக்கிறார். அவர் மட்டுமே பொறுப்புடன் கடைசி வரை ஆடி முடிந்தவரை ரன்களை உயர்த்தி கொடுக்கிறார். டாப் ஆர்டர்கள் விரைவில் அவுட்டாகும் நிலையில், மிடில் ஆர்டரில் தோனி பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டாலும், அவர் கடைசிவரை நின்றால் தான் இந்திய அணியின் ஸ்கோர் உயரும். மிடில் ஓவர்களில் ஸ்பின் பவுலிங்கில் அதிகமான பந்துகளை ரன் அடிக்காமல் கடத்திவிடும் தோனி, கடைசி ஓவர்களில் தான் அதை ஈடுகட்டுவார். 

தோனி ஸ்பின் பவுலிங்கை திறம்பட கையாண்டு ஆடுவதில்லை. குறிப்பாக ரிஸ்ட் ஸ்பின்னர்களிடம் சரணடைந்துவிடுகிறார். ரஷீத் கான், நபி, முஜீபுர் ரஹ்மான் என ஸ்பின்னர்களின் ஆதிக்கம் நிறைந்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 52 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே அடித்த தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அந்த போட்டியில் தோனியின் மந்தமான இன்னிங்ஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரே கடுமையாக விமர்சித்திருந்தார். 

தோனி ஸ்பின் பவுலிங்கில் திணறுவதை அறிந்த எதிரணிகள், அவருக்கு எதிராக ஸ்பின்னையே ஒரு ஆயுதமாக பயன்படுத்திவருகின்றனர். பொதுவாக ஸ்பின் பவுலிங்கை அதிகமாக எதிர்கொண்டு பயிற்சி செய்யும் தோனி, இந்த முறை இன்னும் கொஞ்சம் தீவிரமாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் உதவியுடன் தீவிர பயிற்சி எடுத்துவருகிறார். 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர் ஆடிய காலத்தில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த அவர், பவுலிங்கிலும் மிரட்டியவர். எனவே தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் ஸ்பி பவுலிங்கை எதிர்கொள்ளும் ஆலோசனையை கேட்டு பெற்றார் தோனி.

பந்து சீமில் பட்டு எப்படி திரும்பும், ஸ்பின் பவுலர்கள் எப்படி பந்தை ஸ்பின் செய்வார்கள், அதை எப்படி எதிர்கொண்டு ஆட வேண்டும் என்று சுமார் 20 நிமிடங்கள் ரவி சாஸ்திரி தோனிக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவற்றையெல்லாம் மிகக்கவனமாக உள்வாங்கி தீவிர பயிற்சி எடுத்துவருகிறார் தோனி. 

எனவே நாக் அவுட் சுற்று போட்டியில் ஸ்பின்னுக்கு எதிராக புதிய தோனியை பார்க்கலாம். தனக்கு எதிராக எதிரணிகள் பயன்படுத்தும் ஸ்பின் என்ற ஆயுதத்தை தோனி அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.