உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 49வது ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறும்போது தோனி அழுதுகொண்டே சென்றது ரசிகர்களின் மனதை உருகவைத்துள்ளது. 

மான்செஸ்டரில் நேற்று நடந்த இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 239 ரன்கள் அடித்தது. 240 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் தலா ஒரு ரன்னில் அவுட்டாக, ராகுலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 5 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து ஓரளவிற்கு நன்றாக ஆடினர். ஆனால் இருவருமே தலா 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஜடேஜா பொறுப்பை தனது தோள்களில் சுமந்தார். தனி நபராக கடுமையாக போராடிய ஜடேஜா, பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜா ஒருமுனையில் அதிரடியாக ஆடிவந்ததால் அவருக்கு சிங்கிள் தட்டி கொடுக்கும் வேலையை மட்டும் தோனி செய்துவந்தார்.

ஏனெனில் ஜடேஜா நன்றாக ஆடிக்கொண்டிருப்பதால் அவரிடம் ஸ்ட்ரைக் கொடுப்பதே சரியாக இருக்கும் என்பதால் அவருக்கு அதிக ஸ்ட்ரைக்குகள் கொடுத்தார். கடைசி நேரத்தில் அடிக்க வேண்டிய கட்டாயம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கெத்தாக நின்றார் தோனி. அதேபோலவே ஜடேஜா 47வது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் இந்திய அணியின் ஒற்றை நம்பிக்கை தோனி மட்டுமே. 

49வது ஓவரின் முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசிய தோனி, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் ஓடும்போது இரண்டாவது ரன்னை முடிப்பதற்குள் கப்டிலின் டேரக்ட் த்ரோவால் ரன் அவுட்டானார் தோனி. ஒட்டுமொத்த தேசமும் அந்த சூழலில் தோனியை நம்பியிருந்த நிலையில், ரன் அவுட்டான தோனி அழுதுகொண்டே களத்திலிருந்து வெளியேறினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலகிவருகிறது. அதைக்கண்ட ரசிகர்களும் நெட்டிசன்களும் தோனிக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.