ஐபிஎல் மெகா ஏலத்தில் குல்தீப் யாதவ் தன்னுடைய முக்கியமான இலக்காக இருந்ததாக டெல்லி கேபிடள்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். 

ஐபிஎல் 15வது சீசனில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணி, லெஜண்ட் ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலில் சிறப்பாக ஆடியது. கடைசி நேரத்தில் வாழ்வா சாவா போட்டியில் தோற்றதன் விளைவாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு அமைந்த பாசிட்டிவான விஷயங்களில், குல்தீப் யாதவின் பவுலிங்கும் ஒன்று. கடந்த சில சீசன்களில் குல்தீப் யாதவை கேகேஆர் அணி முறையாக பயன்படுத்தவில்லை. அவருக்கு ஆடும் லெவனில் கூட இடம்கொடுக்காமல் அவரது தன்னம்பிக்கையை சிதைத்தது கேகேஆர் அணி.

கேகேஆர் அணியால் மெகா ஏலத்திற்கு முன் கழட்டிவிடப்பட்ட குல்தீப் யாதவை டெல்லி கேபிடள்ஸ் அணி ஏலத்தில் எடுத்து ஆடவைத்தது. டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் அணி நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல், சீசன் முழுக்க அபாரமாக பந்துவீசி 13 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் விளைவாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த குல்தீப் யாதவ், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இந்நிலையில் குல்தீப் குறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், ஐபிஎல் ஏலத்தில் குல்தீப் யாதவ் என்னுடைய முக்கியமான டார்கெட்டுகளில் ஒருவர். அவர் எந்தளவிற்கு சிறந்த பவுலர் என்பதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம். அவர் அபாரமான திறமைவாய்ந்தவர். அவருடன் நெருங்கி, அவர் சிறப்பாக பயிற்சி மேற்கொள்ள ஏற்ற சூழலை அமைத்து கொடுத்து, அவரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவருவதுதான் முக்கியம். 

அவருடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றினோம். குறிப்பாக வாட்சன், குல்தீப்பின் மனரீதியான விஷயத்தில் நெருங்கி பணியாற்றினார். அதன்விளைவாக, குல்தீப்பும் நன்றாக பந்துவீசி அசத்தினார். குல்தீப் சற்றே வித்தியாசமான பவுலர் - இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் என்று பாண்டிங் கூறினார்.