ரிஷப் பண்டிற்கு ரூ.24 லட்சம் அபராதம் – இன்னும் ஒரு முறை தவறு செய்துவிட்டால் இனி தடை தான்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இன்னும் ஒரு போட்டியில் அபராதம் பெற்றால் ஒரு போட்டியில் தடை விதிக்கப்படும் நிலை உண்டாகும்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. அதுவும் பலம் வாய்ந்த சிஎஸ்கே அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடந்த ஐபிஎல் தொடரில் இடம் பெறாத ரிஷப் பண்ட் இந்த தொடரில் கேப்டனாக இடம் பெற்று விளையாடி வருகிறார்.
இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் சொதப்பினாலும், அடுத்தடுத்த 2 போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார். கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் பலவிதமான தவறுகளை செய்துள்ளார். ஒரு கேப்டனாக பீல்டிங் செட் செய்வதிலும் சரி, ரெவியூ எடுப்பதிலும் சரி பல தவறுகளை செய்துள்ளார்.
ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக ரிஷப் பண்டிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மீண்டும் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மற்ற வீரர்களுக்கும் போட்டி சம்பளத்திலிருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு சீசனில் 3 முறை ஸ்லோ ஓவர் ரெட் முறையில் ஒரு கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அந்த கேப்டனுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்படும் நிலையும் உண்டாகும்.
அந்த வகையில் ஏற்கனவே 2 போட்டிகளில் தாமதமாக பந்து வீசியதற்காக 2 முறை அபராதம் பெற்றுள்ள ரிஷப் பண்டிற்கு 3ஆவது போட்டியிலும் தாமதமாக பந்து வீசினால், அவருக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதோடு, ஒரு போட்டியில் தடையும் விதிக்கப்படும். அப்படி ரிஷப் பண்ட் 3ஆவது முறை அபராதம் பெற்று அவருக்கு தடை விதிக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர் தான் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.