ஐபிஎல் 13வது சீசனில் இன்று நடந்த 2வது போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல், டெல்லி கேபிடள்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட்டின் பார்ட்னர்ஷிப் மற்றும் கடைசி நேர மார்கஸ் ஸ்டோய்னிஸின் காட்டடியால் 20 ஓவரில் 157 ரன்கள் அடித்தது. 13 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணியை சரிவிலிருந்து மீட்டு, ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 73 ரன்களை சேர்த்து கொடுத்தனர். அவர்கள் இருவரும் அவுட்டான பிறகு பொறுப்பை தனது தோள்களில் சுமந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ், அதிரடியாக ஆடி 20 பந்தில் அரைசதம் அடித்து, கடைசி 3 ஓவரில் 57 ரன்களை குவிக்க காரணமாக இருந்தார்.

இதையடுத்து 20 ஓவரில்  157 ரன்களை அடித்த டெல்லி கேபிடள்ஸ் அணி, 158 ரன்களை பஞ்சாப்பிற்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து கருண் நாயர் ஒரு ரன்னிலும் நிகோலஸ் பூரான் ரன்னே அடிக்காமலும், மேக்ஸ்வெல்லும் வெறும் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சர்ஃபராஸ் கான் 12 ரன்னிலும், கிருஷ்ணப்பா கௌதம் 20 ரன்னிலும் என சீரான இடைவெளியில் பஞ்சாப் அணி விக்கெட்டுகளை இழந்தது.

ஒருமுனையில் பஞ்சாப் அணி விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் மயன்க் அகர்வால் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். களத்தில் செட்டில் ஆன பிறகு, 14 ஓவருக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அடித்து ஆட ஆரம்பித்த மயன்க் அகர்வால், 17, 18வது ஓவர்களில் பெரிய ஷாட்டுகளை ஆடி வேகமாக ஸ்கோர் செய்து, வெற்றியை நோக்கி அணியை அழைத்து சென்றார். 

கடைசிவரை தனி ஒருவனாக போராடிய மயன்க் அகர்வால், போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்க தவறினார். பஞ்சாப்பின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அஷ்வின் ஒரே ஓவரில் காயத்தால் வெளியேறியதால், அவரது எஞ்சிய கோட்டாவை மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீச வேண்டிய கட்டாயம் உருவானது. ரபாடா, நோர்ட்ஜேவின் பவுலிங் கோட்டா 19வது ஓவருடன் முடிந்ததால் கடைசி ஓவரை ஸ்டோய்னிஸ் வீசினார். 

கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரும் அடுத்த பந்தில் 2 ரன்னும் 3வது பந்தில் பவுண்டரியும் என முதல் 3 பந்திலேயே 12 ரன்களை அடித்த மயன்க் அகர்வால் 89 ரன்களில் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஜோர்டானின் விக்கெட்டையும் ஸ்டோய்னிஸ் வீழ்த்தியதையடுத்து, போட்டி டை ஆனது. 

இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. பஞ்சாப் அணியிலிருந்து சூப்பர் ஓவரில் பேட்டிங் ஆட ராகுலும் பூரானும் வந்தனர். டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரபாடா சூப்பர் ஓவரை வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த ராகுலை இரண்டாவது பந்தில் பவுன்ஸர் வீசி வீழ்த்திய ரபாடா, அடுத்த பந்திலேயே பூரானை கிளீன் போல்டாக்கினார். அதனால் டெல்லி அணிக்கு சூப்பர் இலக்கு வெறும் 3 ரன்கள் தான். அதை எளிதாக அடித்து டெல்லி வென்றது.

பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்திய மார்கஸ் ஸ்டோய்னிஸ் தான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.