டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கிடைத்த எளிய வெற்றி – எல்லா கிரிடிட்டும் கேப்டன் ரிஷப் பண்ட்டையே சேரும்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் 32ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 32ஆவது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து மோசமான ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சீசனில் முதல் இன்னிங்ஸில் ஒரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இதுவே முதல் முறையாகும்.
மேலும், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான ஸ்கோரை குஜராத் டைட்டன்ஸ் பதிவு செய்துள்ளது. டெல்லிக்கு எதிராக குஜராத் எடுத்த 89 ரன்களே அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்னதாக 125/6, 130, 135/6 என்களை குறைந்தபட்ச ஸ்கோராக பதிவு செய்திருந்தது.
இந்த சீசனில் மிகவும் குறைவான ஸ்கோர் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை குஜராத் டைட்டன்ஸ் பதிவு செய்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் பவுலிஙகைப் பொறுத்த வரையில், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இஷாந்த் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். கலீல் அகமது மற்றும் அக்ஷர் படேல் ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஜாக் பிரேஸர் மெக்கர்க் நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர், 10 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 7 ரன்னிலும், அபிஷேக் போரெல் 15 ரன்னிலும், ஷாய் ஹோப் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக ரிஷப் பண்ட் மற்றும் சுமித் குமார் இருவரும் இணைந்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர். டெல்லி கேபிடல்ஸ் 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் 9 ஆவது இடத்திலிருந்து 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 6ஆவது இடத்திலிருந்த குஜராத் 7 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 7ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சந்தீப் வாரியர் அதிக ரன்கள் கொடுத்திருந்தாலும் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இது அவரது முதல் போட்டி. ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ரஷீத் கான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.