நாக்பூரில் நடந்த கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுலின் அதிரடி அரைசதத்தால், 20 ஓவரில் 174 ரன்களை குவித்தது. 175 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியின் நைமும் மிதுனும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி இந்திய அணியை அச்சுறுத்தினர். அப்படியான சூழலில் மிதுனின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்த தீபக் சாஹர், அதன்பின்னர் தனது விக்கெட் வேட்டையை தொடர்ந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் ஷிவம் துபேவும் நன்றாக வீசி தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த போட்டியில் ஹாட்ரிக் உட்பட மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் தீபக் சாஹர். 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலிங் இதுதான். அதுமட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் சாஹர் படைத்தார். 

கடைசி போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் வென்று அசத்தினார் தீபக் சாஹர். சாதனைகளை குவித்ததுடன் இந்திய அணியை வெற்றி பெற வைத்த தீபக் சாஹர், கேப்டன் ரோஹித் சர்மா தன் மீது வைத்த நம்பிக்கைதான் தனது சிறப்பான பவுலிங்கிற்கு காரணம் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய தீபக் சாஹர், ரோஹித் என்னிடம் வந்து, உன்னை இன்றைக்கு பும்ராவாக பயன்படுத்தப்போகிறேன் என்றார். உன்னை முக்கியமான ஓவர்களை வீசவைக்க போகிறேன் என்றார். அது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தது. நெருக்கடியான சூழலில், என் மீது நம்பிக்கை வைத்து ஒரு பொறுப்பை கொடுத்தால், எனக்கு அது பெரிய உத்வேகமாக இருக்கும். என்னை யாராவது நம்பினால் நான் எப்போதையும் விட இன்னும் சிறப்பாக செயல்படுவேன். கேப்டன் ரோஹித் என் மீது நம்பிக்கை வைத்து என்னிடம் பொறுப்பை கொடுத்தார். நெருக்கடியான சூழலில் கேப்டன் என் மீது வைத்த நம்பிக்கைதான் எனது சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் என்று தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.