இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி, அந்த முடிவிற்கு நியாயம் சேர்க்கவில்லை. முதல் இன்னிங்ஸில் வெறும் 157 ரன்களுக்கு 2வது செசனிலேயே ஆல் அவுட்டானது. இலங்கை அணியில் தொடக்க வீரர் குசால் பெரேரா மட்டுமே அரைசதம் அடித்தார். அவரும் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அவரை தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் அந்த அணி சொற்ப ரன்களுக்கு சுருண்டது.

கேப்டன் கருணரத்னே 2 ரன்கள் மட்டுமே அடித்தார். திரிமன்னே, ஹசரங்கா, சமீரா ஆகிய மூவர் மட்டுமே இரட்டை இலக்க ரன் அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, இலங்கை அணி வெறும் 157 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்க அணியின் ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யா அதிகபட்சமாக ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் நோர்க்யாவின் அதிவேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 157 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் மார்க்ரம் ஐந்து ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்த வாண்டெர்டசன் சிறப்பாக ஆட, இருவருக்கும் இடையே பார்ட்னர்ஷிப் பில்ட் ஆனது.

தொடக்கம் முதலே மிகச்சிறப்பாக ஆடிய டீன் எல்கர் அரைசதம் அடித்து, அதன்பின்னரும் கவனமாகவும் தெளிவாகவும் பேட்டிங் ஆடி சதத்தை நெருங்குகிறார். எல்கரும் வாண்டெர்டசனும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்துள்ளது. எல்கர் 92 ரன்களுடனும், வாண்டெர்டசன் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.