இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் கேட்ச்சை தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் அபாரமாக கேட்ச் செய்தார். 

சவுத்தாம்ப்டனில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களை நிலைக்கவிடாமல் ஆரம்பத்திலேயே பும்ரா வீழ்த்திவிட்டார். பின்னர் நடு ஓவர்களில் சீரான இடைவெளியில் தென்னாப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர்களை சாஹல் வீழ்த்த, கடைசி நேரத்தில் மோரிஸ்-ரபாடா ஜோடியின் பொறுப்பான பேட்டிங்கால் 227 ரன்கள் அடித்தது தென்னாப்பிரிக்கா. 

228 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியில் வழக்கமாக ரன் சேஸ் செய்வதில் வல்லவரான கோலி, இந்த போட்டியில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அனைவரின் எதிர்பார்ப்பும் கோலி மீதே இருக்க, ஆனால் பொறுப்பாக ஆடி வெற்றி பெற வைத்தது ரோஹித் சர்மா. தவான், கோலி, ராகுல், தோனி ஆகியோர் ஆட்டமிழந்தாலும், ஆடுகளத்தின் தன்மையையும் போட்டியின் சூழலையும் நன்கு அறிந்ததால் அவசரப்படாமல் சிறப்பாக ஆடி சதமடித்து அணியை வெற்றி பெற செய்தார் ரோஹித். 

இலக்கை விரட்டுவதில் வல்லவரான விராட் கோலி, ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாகத்தான் ஆடினார். எனினும் அவரது விக்கெட், குயிண்டன் டி காக்கின் அபாரமான கேட்ச்சால் விழுந்தது. ஃபெலுக்வாயோவின் பந்தை சாமர்த்தியமாக, ஸ்லிப்புக்கு மேல் தேர்டு மேன் திசையில் தூக்கி அடிக்க பார்த்தார் கோலி. ஆனால் அதை அபாரமாக ஜம்ப் செய்து பிடித்தார் குயிண்டன் டி காக். அவர் நின்ற இடத்தில் இருந்து 2.77 மீட்டர் தொலைவிற்கு தாவிப்பிடித்தார் டி காக். அபாரமான கேட்ச்சின் வீடியோ இதோ..