உலக கோப்பை தொடரின் தென்னாப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோ ரூட், இயன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகிய நால்வரும் அரைசதம் அடிக்க, அந்த அணி 50 ஓவர் முடிவில் 311 ரன்களை குவித்தது. 

312 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியில் டி காக் மற்றும் வாண்டெர் டசன் ஆகிய இருவரை தவிர மற்ற எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. டி காக் 68 ரன்களையும் டசன் 50 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்க, அதன்பிறகு தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. அந்த அணி 40வது ஓவரில் வெறும் 207 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. 

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் ஒரே நம்பிக்கையாக டி காக் திகழ்ந்தார். ஆனால் சிறப்பாக ஆடிய அவரும் 68 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். டி காக் சதமடித்து தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற வைக்கும் வாய்ப்பு அருமையாக இருந்தது. ஆனால் அதை செய்ய தவறிவிட்டார். ஆனாலும் டி காக்கின் இன்னிங்ஸ் அபாரமான மற்றும் முக்கியமான ஒன்று.

டி காக் 29 ரன்கள் இருந்தபோதே, அடில் ரஷீத் வீசிய 11வது ஓவரின் 5வது பந்து ஸ்டம்பில் அடித்தது. ஆனால் ஸ்டிக் கீழே விழாததால் அது அவுட்டில்லை. அதனால் டி காக் தப்பினார். அந்த பந்தை பின்பக்கம் தட்டிவிட முயன்றார் டி காக். ஆனால் பந்து மிஸ் ஆகி ஸ்டம்பில் தட்டிவிட்டு சென்றது. ஸ்டம்ப் லைட்டும் மிளிர்ந்தது. ஆனால் ஸ்டிக் விழாததால் அது அவுட்டில்லை. அதனால் இங்கிலாந்து வீரர்கள் அதிருப்தியடைந்தனர். டி காக் தப்பிய அந்த வீடியோ இதோ..