ரஞ்சி தொடரில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மொஹாலியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, முதல் இன்னிங்ஸில், 313 ரன்களை குவித்தது. இதையடுத்து டெல்லி அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் பேட்டிங்கின்போது, ஷுப்மன் கில்லின் அத்துமீறலால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. முகமது ரஃபி என்ற அம்பயர், இந்த போட்டியில் முதன்முறையாக அம்பயரிங் செய்துவருகிறார். அவருக்கு இதுதான் அறிமுக போட்டி. ஷுப்மன் கில்லுக்கு அவர் விக்கெட் கீப்பிங் கேட்ச் என்று அவுட் கொடுத்தார். ஆனால் பந்து பேட்டில் படவில்லை என்பதால், அம்பயரின் முடிவால் கடும் அதிருப்தியடைந்த ஷுப்மன் கில், களத்தை விட்டு வெளியேற மறுத்து, அறிமுக அம்பயர் முகமது ரஃபியுடன் வாக்குவாதம் செய்தார். 

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், அவுட் முடிவை திரும்பப்பெற்று ஷுப்மன் கில் ஆட அனுமதிக்கப்பட்டார். ஷுப்மன் கில்லின் செயல்பட்டாலும், அவர் மறுபடியும் பேட்டிங்கை தொடர அனுமதிக்கப்பட்டதாலும் கடும் அதிருப்தியடைந்த டெல்லி அணி வீரர்கள், பந்துவீச மறுத்து களத்தை விட்டு வெளியேறினர். உடனடியாக போட்டியின் ரெஃப்ரி தலையிட்டு பேசி, பிரச்னையை முடித்துவைத்தார். அதன்பின்னரும் தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில், இந்த சம்பவம் நடந்து சிறிது நேரத்திலேயே மீண்டும் ஆட்டமிழந்தார். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், ஷுப்மன் கில் மீது, போட்டி நடுவரிடம் எந்தவித புகாரையும் அளிக்கப்போவதில்லை என டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளர் வினோத் திஹாரா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய வினோத் திஹாரா, டெல்லி அணி போட்டி நடுவரிடம் கில் ஷுப்மன் கில் மீது எந்தவித புகாரும் அளிக்கப்போவதில்லை. அந்த சம்பவம் அங்கேயே அப்போதே முடிந்துவிட்டது. கில்லை ஏன் மீண்டும் பேட்டிங் ஆட அனுமதித்தார்கள் என்ற சந்தேகமே சர்ச்சையாக உருவானது. அதற்கு பதில் வேண்டும் என்பதுதான் டெல்லி அணியின் நோக்கமே தவிர, வேறு எதுவுமில்லை. அதுகுறித்த தெளிவும் விடையும் கிடைத்துவிட்டதால், கில் மீதோ இந்த சம்பவம் குறித்தோ போட்டி நடுவரிடம் எந்தவித புகாரும் அளிக்கப்போவதில்லை என்று வினோத் தெரிவித்தார்.