உலக கோப்பை நெருங்கிய நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறியுள்ளது. உலக கோப்பை தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ளதால் ரசிகர்கள் அந்த கிரிக்கெட் திருவிழாவை காண ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளுமே சமபலத்துடன் வலுவாக இருப்பதுடன் தொடர்ச்சியாக அபாரமாக ஆடி கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகளை வாரி குவித்துள்ளன. 

இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளின் மீதுதான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியில் திடீரென நேற்று 3 மாற்றங்கள் செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட இறுதி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

அலெக்ஸ் ஹேல்ஸுக்கு பதில் வின்ஸ், டேவிட் வில்லிக்கு பதில் ஆர்ச்சர் மற்றும் ஜோ டென்லிக்கு பதில் டாவ்சன் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். அணியிலிருந்து நீக்கப்பட்ட மூவரில் மிகவும் துரதிர்ஷ்டசாலி என்றால் அது டேவிட் வில்லிதான். டேவிட் வில்லி பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே சிறந்த பங்களிப்பு செய்து நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் ஜோஃப்ரா ஆர்ச்சரை சேர்க்க, யாராவது ஒருவரை நீக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் வில்லி நீக்கப்பட்டார். 

இந்நிலையில், தனது அதிருப்தியை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார் டேவிட் வில்லி. எனக்கு என்ன சொல்வதேன்றே தெரியவில்லை என்று விரக்தியாக பதிவிட்டுள்ள வில்லி, தனது மகன் உற்சாகமாக நடனமாடும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டதை அடுத்து ராயுடு தனது அதிருப்தியை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். தனக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட விஜய் சங்கரை 3 டைமன்ஷனல் வீரர் என்று தேர்வுக்குழு தலைவர் நியாயப்படுத்தியிருந்ததை கிண்டலடிக்கும் வகையில் ராயுடு டுவீட் செய்திருந்தார். 

அதன்பின்னர் பாகிஸ்தான் அணியில் முதலில் இடம்பெற்று பின்னர் வாய்ப்பை இழந்த ஜுனைத் கானும் தனது அதிருப்தியை டுவிட்டரில் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், ராயுடு, ஜுனைத் கான் ஆகியோரை தொடர்ந்து டேவிட் வில்லியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.