தமிழகத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலரான நடராஜன், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மிகச்சிறப்பாக பந்துவீசி, தனது துல்லியமான யார்க்கர்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் நெட் பவுலராக அழைத்து செல்லப்பட்டார்.

வருண் சக்கரவர்த்தியின் காயத்தால் டி20 அணியில் இடம்பெற்று அருமையாக பந்துவீசி, கேப்டன் கோலியின் நன்மதிப்பை பெற்ற நிலையில், நவ்தீப் சைனியின் காயத்தால் ஒருநாள் அணியில் இடம்பெற்று, அபாரமாக பந்துவீசி அசத்தியதன் விளைவாக, டெஸ்ட் போட்டிகளுக்கான நெட் பவுலராக ஆஸி.,யிலேயே இருக்கவைக்கப்பட்டார் நடராஜன்.

நெட்டில் நடராஜன் அருமையாக பந்துவீசி வந்த நிலையில், ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் காயமடைந்ததை தொடர்ந்து, கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்ற நடராஜன், அறிமுக இன்னிங்ஸிலேயே முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிலும் அசத்தினார். மேலும் ஒரே சுற்றுப்பயணத்தில் 3 விதமான போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் நடராஜன்.

இந்நிலையில், ஐபிஎல்லில் நடராஜன் ஆடும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், நடராஜனை லெஜண்ட் எனவும் அவரை தனது அணியில் பெற்றது பெரும் பாக்கியம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடராஜன் குறித்து பேசிய வார்னர், வாழ்த்துக்கள் நட்டு.. நீ மிகப்பெரிய லெஜண்ட். களத்திலும் சரி, களத்திற்கு வெளியேயும் சரி, மிகச்சிறந்த மனிதன் நீ. உன்னை எனது அணியில் பெற்றிருப்பது பெருமகிழ்ச்சி என்று புகழாரம் சூட்டியுள்ளார் வார்னர்.