இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் 2 அபாரமான கேட்ச்சுகள் பிடிக்கப்பட்டன. ஒன்று விராட் கோலி பிடித்த கேட்ச். மற்றொன்று டேவிட் மில்லர் பிடித்த கேட்ச். மில்லர் பிடித்த கேட்ச்சை கோலியும் தவானும் வியந்து பார்த்த வீடியோ வைரலாகிவருகிறது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே மொஹாலியில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 149 ரன்கள் அடித்தது. 150 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, விராட் கோலியின் அதிரடி அரைசதம் மற்றும் தவானின் பொறுப்பான பேட்டிங்கால், 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் ஆடும்போது குயிண்டன் டி காக் அடித்த பந்தை, மிட் ஆஃப் திசையில் விராட் கோலி ஓடிச்சென்று ஒற்றை கையில் அபாரமான ஒரு கேட்ச்சை பிடித்தார். அந்த போட்டியின் சிறந்த கேட்ச் என்று அதை மட்டும் குறிப்பிட முடியாதபடி, இரண்டாவது இன்னிங்ஸில் மில்லர் ஒரு மிரட்டலான கேட்ச்சை பிடித்தார். 

40 ரன்கள் அடித்த தவான், ஸ்டிரைட் திசையில் தூக்கியடித்த பந்தை லாங் ஆன் திசையில் இருந்து ஓடிவந்து பவுண்டரிலைனில் வைத்து செம ஜம்ப் செய்து ஒற்றை கையில் பிடித்து அரங்கத்தை மட்டுமல்லாமல் கோலி - தவான் உட்பட அனைத்து வீரர்களையும் வாய்பிளக்கவைத்தார் மில்லர். மில்லர் பிடித்த அந்த கேட்ச்சை களத்தில் இருந்த கோலியும் தவானும் வியந்து பார்த்தனர். அந்த வீடியோ இதோ..