இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கேஎல் ராகுல் பேட்டிங் ஆடிய விதத்தை இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் கோவர் வெகுவாக புகழ்ந்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித்துடன் மயன்க் அகர்வால் தான் தொடக்க வீரராக இறங்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் காயம் காரணமாக அவர் ஆடமுடியாமல் போனதையடுத்து, மிடில் ஆர்டரில் இறங்குவதாக இருந்த ராகுல் தொடக்க வீரராக ஆடினார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடக்க வீரராக இறங்க கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்ட ராகுல், சிறப்பாக ஆடி முதல் இன்னிங்ஸில் 84 ரன்களை குவித்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்துகொண்டிருந்த நிலையில், மறுமுனையில் நிலைத்து ஆடினார் ராகுல். சவாலான இங்கிலாந்து கண்டிஷனில் அனுபவ ஃபாஸ்ட் பவுலர்களான ஆண்டர்சன், பிராட் ஆகியோரை திறம்பட எதிர்கொண்டு ஆடிய ராகுலின் இன்னிங்ஸ் தான், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை பெற காரணமாக இருந்தது.

கடந்த 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கடைசி டெஸ்ட்டில் சதமடித்த ராகுல்(149), அங்கு விட்ட இடத்திலிருந்து முதல் டெஸ்ட்டில் பேட்டிங்கை தொடர்ந்ததை போல அருமையாக ஆடினார்.

கேஎல் ராகுல் தனக்கு மீண்டும் ஓபனிங்கில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தனக்கான இடத்தை தக்கவைத்த நிலையில், அந்த போட்டியில் அவரது ஷாட் செலக்‌ஷன் மற்றும் அவர் ஆடிய விதம் ஆகியவற்றை முன்னாள் வீரர்கள் பலரும் புகழ்ந்துவருகின்றனர்.

கேஎல் ராகுல் குறித்து பேசிய இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் கோவர், பேட்டிங்கில் முக்கியம் என்னவென்றால் குறிப்பிட்ட ஆடுகளம் எதற்கு ஒத்துழைக்கிறது என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு ஆட வேண்டும். இங்கிலாந்தில் பெரும்பாலும் அனைத்து பந்துகளும் பேட்டை தாக்கும். இங்கிலாந்து ஆடுகளங்கள் பவுலர்களுக்கான விக்கெட் எடுக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக தன்னம்பிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம். அதைத்தான் ராகுல் சரியாக செய்தார். 

மிகவும் சிறந்த திட்டங்களுடன், மிக நேர்த்தியாக பேட்டிங் ஆடினார் ராகுல். ஆடுகளம் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும்போது, பொதுவாகவே பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடுவதாக உணர்வார்கள். ஆனால் ராகுல் தன்னம்பிக்கையுடன் சிறப்பாக ஆடினார் என்று டேவிட் கோவர் தெரிவித்தார்.