ஐபிஎல் ஏலத்தில் நல்ல தொகைக்கு எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் பிக்பேஷ் லீக்கில் சிறப்பாக ஆடிவருவதால், அவர்களை எடுத்த அணிகள் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் உள்ளன. கிராக்கியே இல்லாமல் அடிப்படை விலைக்கு மும்பை அணியால் எடுக்கப்பட்ட கிறிஸ் லின்னும் சிறப்பாக ஆடிவருகிறார். 

இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட டார்ஷி ஷார்ட், பிக்பேஷ் லீக்கில் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தியுள்ளார். 2018 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த ஷார்ட், 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு சீசன்களிலுமே புறக்கணிக்கப்பட்டுள்ளார். 

பிக்பேஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் ஆடிவரும் ஷார்ட், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக சதமடித்து அசத்தியுள்ளார். ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, ஷார்ட்டின் அதிரடியால் 20 ஓவரில் 180 ரன்களை குவித்தது. இந்த 180 ரன்னில் 103 ரன்கள் ஷார்ட் அடித்தது. அதிரடியாக ஆடிய ஷார்ட், 70 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்தார்.

181 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை 172 ரன்களுக்கு சுருட்டி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி. 

ஷார்ட் டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் டீசண்ட்டான வீரர் தான் என்றாலும் கூட, அவர் ஐபிஎல்லில் புறக்கணிக்கப்பட்டுவருகிறார்.